tamilnadu

img

பிப்ரவரியில் சட்டமன்றம் முற்றுகை... 8 வழிச் சாலை எதிர்ப்பு கூட்டியக்கம் முடிவு....

திருவண்ணாமலை:
சேலம்- சென்னை 8வழிச்சாலைத்திட்டத்தை கைவிடக்கோரி தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிட அந்த சாலைக்கான எதிர்ப்பு கூட்டியக்கம் அறிவித்துள்ளது.திருவண்ணாமலையில்  8 வழி சாலை எதிர்ப்பு கூட்டியக்கம் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் பகுதியில் நடைபெற்றது.  இதில் 5 மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு  விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம், விவசாயிகள் மகாசபை மாநில பொறுப்பாளர் சந்திரமோகன், கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் டி.ரவீந்திரன்விவசாயிகள் சங்க மாநில நிர்வாகி  ஸ்டாலின் மணி  உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்திற்கு பின்னர் விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர்  பெ.சண்முகம்  செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எட்டு வழிச் சாலை  தொடர்பான நீதிமன்ற உத்தரவை விவசாயிகள் சங்கம் புறக்கணிக்கிறோம். விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு எதிராக உள்ள இந்த எட்டு வழி சாலைத் திட்டம் கைவிடப்படாத நிலையில்,  டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி  சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அப்பொழுது தீர்வு ஏற்படாவிட்டால், பொங்கலன்று விவசாயிகள் வீடுகளில், கறுப்புக்கொடி ஏற்றி, விவசாயிகள், துக்கப் பொங்கல் அனுசரிக்கும்  நிகழ்ச்சி நடைபெறும்.அப்போதும், அரசு, விவசாயிகளின் கோரிக்கையை உதாசீனப்படுத்தினால், பிப்ரவரி மாதம், சட்டப்பேரவை கூடும் தினங்களில், விவசாயிகள் தங்கள் குடும்பங்களுடன், சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவார்கள்.திமுக தலைவர்  ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி களும், எட்டு வழிச் சாலை திட்டத்தை ஆதரிக்க மாட்டோம் என தேர்தல் அறிக்கையில்  குறிப்பிட வேண்டும்  என்று கோரிக்கை வைப்போம்.இவ்வாறு சண்முகம் தெரிவித்தார்.

;