17வது மக்களவை தேர்தலின் முடிவுகள் நமது நாட்டின் சமூக, பொருளாதார, மக்களின் வாழ்க்கையில் அடிப்படையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
எல்லாம் தலை கீழ்!
தற்போதைய பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல், எரிவாயு உருளையில் துவங்கி அனைத்து விலைவாசி உயர்வும், வேலையின் மையும், ஆலை மூடல்களும், வேலை இழப்புக்களும் அனைத்துப் பகுதி மக்களையும் சொல்லாண்ணா துயரங்களுக்கு ஆளாக்கி விட்டன. குறிப்பாக பணமதிப்பு நீக்கம் அப்பாவி பொது மக்களையும் சிறு-குறு, நடுத்தர உரிமையாளர்களையும் புரட்டிப்போட்டு விட்டது.
வேலை பறிப்பு!
சரக்கு மற்றும் சேவை வரியை அமலாக்கிய அலங் கோலத்தினால் பாரம்பரிய மற்றும் குடிசைத்தொழில்கள், குறு-சிறு-நடுத்தர தொழில்கள் சீரழிக்கப்பட்டு கோடிக்கணக்கான உழைப்பாளி மக்களின் வேலையை பறித்தது.
தற்கொலை!
கடன் சுமைகளில் சிக்கி வெளியேற முடியாமல் விவசாயிகளின் தற்கொலை தொடர்கிறது. கட்டுப்படியாகும் விலை இல்லை. சாமிநாதன் கமிட்டியை படிக்கக்கூட நாதியில்லை, வாய் சவடாலைத் தவிர விவசாயிகளுக்கு இந்த அரசு வேறொன்றும் செய்யவில்லை.
மோடியின் தோல்வி!
ஆண்டுக்கு 2 கோடி புதிய வேலையை உருவாக்குவோம் என்று வாக்குறுதி அளித்தது. இந்த ஐந்தாண்டு காலத்தில் 10 கோடி பேருக்கு வேலைகளை உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால் 3.4 லட்சம் பேருக்கானவேலை வாய்ப்பைத்தான் உருவாக்கியது. அதே நேரத்தில் பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டியினால் நாடு முழுவதும் 1.1 கோடிக்கும் மேற்பட்டோர் வேலையிழந்துள்ளனர். கருப்பு பண ஒழிப்பும், 15 லட்சம் ரூபாய் டமாரமும் வெற்றுவேட்டானது. சொன்னது எதையும் செய்யாத, அனைத்து துறைகளிலும் தோற்றுப்போன ஆட்சி தான் மோடி ஆட்சி.
கொத்தடிமை....
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் நிரந்தர தொழிலாளர்களை படிப்படியாக அகற்றிவிட்டு, ஒப்பந்தம், கேசுவல், பயிற்சியாளர், பழகுநர் என்ற பெயர்களில் தொழிலாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். மத்திய மோடி அரசு “ குறிப்பிட்ட கால வேலை”, “நீம்” என்ற புதிய வேலை முறைகளை அனுமதித்துள்ளது. ஆயுள் முழுக்க கொத்தடிமைகளாகவே தொழிலாளர்கள் இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
பாசிசம்...
சங்கம் வைப்பதற்கான சட்டப்பூர்வ உரிமையும் கூட மோடி ஆட்சியில் பறிக்கப்படுகிறது. முதலாளிகளோடு அரசும் கைகோர்த்துக்கொண்டு தொழிலாளர்கள் மீது கூட்டுத்தாக்குதலை நடத்துகிறது. மக்கள் நடத்தும் எல்லா போராட்டங்களுக்கும் அடக்குமுறைகளே பதிலாக இருக்கிறது. ஒருபானை சோற்றுக்கு ஒருசோறு தான் தூத்துக்குடி படுகொலை. மாற்றுக்கருத்துக்களை சகிக்காத, வெறுப்பை மட்டுமே மத, இன அடிப்படையில் உமிழ்கிற பாசிசப்போக்கு தலைவிரித்து ஆடுகிறது.
மூர்க்கத்தனம்....
பி.எஸ்.என்.எல், பாதுகாப்பு, ரயில்வே, விமானப் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து, நீர்வழி போக்குவரத்து, ஸ்டீல், ஆயில், பவர் கிரிட், நிலக்கரி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள், வங்கி, காப்பீடு போன்ற அரசுக்கு சொந்தமான நிதி நிறுவனங்கள், கல்வி, சுகாதாரம் என அனைத்தையும் தனியாருக்கு தாரைவார்க்க மூர்க்கத்தனமாய் முயற்சித்து வருகிறது. இந்த ஆண்டு மட்டும் ரூ.85 ஆயிரம் கோடிக்கு பொதுத்துறை பங்கு விற்பனை செய்யப்பட் டுள்ளது. தொழிலாளர்களை ஒட்ட சுரண்ட அனுமதித்தது மட்டுமல்ல, நாட்டின் நில வளம், நீர்வளம், கனிம வளங்களையும் அடிமாட்டு விலைக்கு மோடி அரசு முதலாளிகளுக்கு விற்று வருகிறது. தொழிலாளர் சட்டத்திருத்தம் என்ற பெயரில் 44 வகையிலான சட்டங்களை 4 தொகுப்புகளாக சுருக்குவது, மோட்டார் வாகன சட்டத் திருத்தம், மின்சார ஒழுங்கு முறை சட்டத்தை கொண்டு வந்து சமூக பாதுகாப்பை சீர்குலைத்துவிட்டது.
நெருக்கடி....
பட்டாசுத்தொழிலுக்கு வேட்டுவைக்கிறது. பொது விநியோகத் திட்டத்தை படிப்படியாக சீரழிக்கிறது. கிராமப்புற, நகர்ப்புற ஏழைகளுக்கு நிவாரணம் தரும் நூறு நாள் வேலைத் திட்டம் முடக்கப் படுகிறது. ஜவுளி , பீடி, தோட்டம் போன்ற தொழில்கள் நெருக்கடிக்கு உள்ளாக்கியது. தகவல் தொழில்நுட்பம் உட்பட நவீன தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கூட நிர்ணயம் செய்யவில்லை.
அடிமைகள்...
முதலமைச்சர் மீது கொலைக் குற்றச்சாட்டு, அமைச்சர்கள் மீது சொத்துக் குவிப்பு, குட்கா ஊழல், வருமான வரித்துறை ரெய்டுகள், கோடிக்கணக்கான பணம் பறிமுதல், வேலை நியமனம், ஊர்மாற்றம், பதவி உயர்வு போன்ற அரசு நிர்வாக நடவடிக்கைகளில் லஞ்சம், மணல் கொள்ளை, காண்ட்ராக்ட் கொள்ளை என மக்களின் பணத்தை பங்குபோட்டுக்கொள்ளவே ஆட்சியை தக்கவைக்க பாஜகவிடம் அடிமையாகியுள்ளனர்.
அக்கறையின்மை...
அரசுப்போக்குவரத்து, மின்சாரம், சிவில் சப்ளை, டாஸ்மாக், கூட்டுறவு, உள்ளாட்சி போன்ற மாநில பொதுத்துறை நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நிரந்தப்படுத்தப்படாமல் உள்ளனர். அங்கன்வாடி,சத்துணவு ஆஷா போன்ற திட்ட ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் மறுக்கப்படுகிறது.புதிய பென்சனை கைவிட மறுக்கிறார்கள். கட்டுமானம், ஆட்டோ, தையல், சுமைப்பணி மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரியங்களில் தொழிலாளர்கள் பதிவு, புதுப்பித்தல், பணப்பயன் கேட்பு என அனைத்துக்கும் தொழிலா ளர்கள் நேரடியாக வர கட்டாயப்படுத்துதல், பணப்பயன்கள் காலதாமதமாக வழங்குதல், பணப்பயன்களை இரட்டிப்பாக்குதல், தேவையான நிதி ஒதுக்குதல் போன்ற நடவடிக்கைகள் அனைத்திலும் அக்கறையற்ற போக்கு.
வஞ்சிப்பு...
கிராமங்களிலும். நகரங்களிலும் உள்ள பெண் உழைப்பாளிகள் பெரிதும் வஞ்சிக்கப்படுகின்றனர். பாலியல் தொல்லைகள் பெருகி வருகின்றன. இப்படி மக்களை பற்றி, உழைப்பாளிகளை பற்றி கவலைப்படாத மதவாத பாஜக - லஞ்ச, வாலண்ய அதிமுக கூட்டணியை தமிழக உழைப்பாளி மக்களும், வாக்காளர்களும் தோற்கடிக்க வேண்டும். மத்திய பாஜக அரசின் கட்டளைக்குப் பணிந்து அதிமுக அரசின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பாரபட்சமாக தேர்தல் ஆணையம் இனியும் செயல்படாமல் அரசியல் சட்ட கடமையை அச்சமின்றி நிறைவேற்றிட முன்வர வேண்டும் என்று திருச்சியில் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில் நடந்த சிஐடியு மாநில நிர்வாகிகள் , மாவட்டச் செயலாளர், சம்மேளனச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், உதவி பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன், துணைத் தலைவர்கள் ஆர்.சிங்காரவேலு, எம்.சந்திரன் உட்பட மாநில நிர்வாகிகள், மாவட்ட, சம்மேளன செயலாளர்கள் கலந்து கொண்டனர்.