india

img

திவாலான மோடி அரசுக்கு எதிராக மே 26 கருப்பு தினம் அனுசரித்திடுக.... மாதர் - வாலிபர்- மாணவர் சங்கங்கள் அறைகூவல்...

புதுதில்லி:
திவாலான மோடி அரசுக்கு எதிராக மே 26 அன்று கருப்பு தினமாக அனுசரித்திட வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் அறைகூவல் விடுத்துள்ளன.
இது தொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மாலினி பட்டாச்சார்யா, மரியம் தாவ்லே, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் முகமது ரியாஸ், அபாய் முகர்ஜி, இந்திய மாணவர் சங்கம் சார்பில் வி.பி. சானு மற்றும் மாயுக் பிஸ்வாஸ் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வரலாறு படைத்துக்கொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டம் மே 26 அன்று ஆறு மாதங்களை நிறைவுசெய்கிறது. மேலும் அன்றைய தினம், தொழிற்சங்கங்களால் விடுக்கப்பட்ட அகில  இந்திய வேலை நிறுத்தம் நடந்து ஆறு மாத காலமாகியிருப்பதையும் குறிப்பிடுகிறது. மேலும் அதே தினம்தான் மோடி தலைமையிலான ஆர்எஸ்எஸ்/பாஜக அரசாங்கம் பதவியேற்று ஏழாண்டுகளாவதையும் குறிப்பிடுகிறது.  இந்த அரசாங்கமானது நாடு சுதந்திரம் பெற்றபின் அமைந்துள்ள அரசாங்கங்களிலேயே மிகவும் திவாலான, இதயமற்ற, மதவெறிபிடித்த, மக்கள்விரோத மற்றும் கார்ப்பரேட் ஆதரவு அரசாங்கம் என்பதையும் மெய்ப்பித்திருக்கிறது.

மோடி அரசாங்கம், நாட்டில் அதிகரித்துவரும் கோவிட் பெருந்தொற்றைக் கையாள்வதில் படுதோல்வி அடைந்திருப்பதற்குக் கிரிமினல்ரீதியாகப் பொறுப்பாகும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும், இந்திய மாணவர் சங்கமும் கண்டிக்கின்றன. பிரதமர் நாட்டில் மக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேதனைகள் அடைந்துகொண்டிருப்பதைப்பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாமல் இருந்து வருகிறார். இந்த அரசாங்கம் நிறைவேற்றியுள்ள மக்கள் விரோத, விவசாயிகள் விரோத மற்றும் தொழிலாளர் விரோத மூன்று வேளாண் சட்டங்களையும், தொழிலாளர் (விரோத) சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று கோருகிறோம்.மே 26 அன்று அனைத்து இல்லங்களிலும், வாகனங்களிலும் கருப்புக் கொடிகள் ஏற்றப்படும்.

நாடு முழுவதும் நடைபெறவுள்ள கிளர்ச்சிப் போராட்டங்களில் பல்லாயிரக்கணக்கான பெண்களும், இளைஞர்களும், மாணவர்களும் பங்கேற்று, கீழ்க்கண்ட கோரிக்கைகளை உரத்து முழங்குவார்கள்:

$  பிஎம்கேர்ஸ் என்னும் பெயரில் வசூலிக்கப்பட்டுள்ள நிதியத்தில் உள்ள தொகையை, ஆக்சிஜன், வெண்டிலேட்ட.ர்கள், மருந்துகள், மருத்துவமனைப் படுக்கைகள் உற்பத்திக்குப் பயன்படுத்துக. சென்ட்ரல் விஷ்டா திட்டத்தை நிறுத்துக. அதற்காக ஒதுக்கியிருக்கும் தொகையை இவற்றுக்குப்பயன்படுத்துக.

$  கோவிட் சுகாதார வசதிகளை அதிகப்படுத்தி, ஆறு மாத காலத்திற்குள் அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடப்படுவதை உத்தரவாதப் படுத்துக.

$  தனியார் மருத்துவமனைகளைக் கறாராக முறைப்படுத்துக. அவை கோவிட் தொற்று நோயாளிகளிடம் கொள்ளையடிப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்திடுக.

$   பொது சுகாதார அமைப்புமுறையை வலுப்படுத்திடப் போதிய ஒதுக்கீடுகள் செய்திடுக.

$   வருமான வரி செலுத்தும் வரம்புக்குள் வராத குடும்பத்தினருக்கு மாதந்தோறும் 7,500 ரூபாய் ரொக்கப்பணம் அளித்திடுக.

$    அடுத்த ஆறு மாதங்களுக்கு ஒவ்வொருவருக்கும் மாதத்திற்கு 10 கிலோ உணவு தானியங்களை இலவசமாக அளித்திடுக.

$   மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலையும், நாள் ஊதியம் 600 ரூபாயும் அளித்திடுக.

$   தனியார்துறையில் வேலையிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிடுக.

$   பதிவுசெய்யப்பட்டுள்ள வேலையில்லா இளைஞர்களுக்கு வேலையின்மை ஊதியம் வழங்கிடுக.

$   செமஸ்டர் கட்டணங்கள் உள்பட அனைத்துக் கல்லூரிக் கட்டணங்களையும் ரத்துசெய்க. ஏழை மற்றும் சமூகரீதியாக வறிய நிலையில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் அனைத்துக் கல்வி வசதிகளையும் அளித்திடுக. 

இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். (ந.நி.)