சென்னை:
இந்திய மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் இலங்கை கடற்படையைக் கண்டித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காத மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உரிய அனுமதி பெற்று மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் சிலரை இலங்கை கடற் படையினர் கைதுசெய்துள்ளனர். சிலர் கைது நடவடிக்கைகளுக்கு அச்சமடைந்து இரவோடு இரவாக கரை திரும்பியுள்ளனர். இலங்கைக் கடற்படையின் இந்த அராஜகப் போக்கு பல ஆண்டுகளாக தொடர்ந்து வருவதாக மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.இது குறித்து மத்திய, மாநில அரசுகளைக் கண் டித்து வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “இலங்கைக் கடற்படை, நமது மீனவர்களைக் கைதுசெய்வதும் படகுகள், மீன் பிடி கருவிகளைப் பறிமுதல் செய்வதும் தொடர்ச்சியாக நடந்துவருகின்றது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, இப்படகுகளை மீட்பதற்கு மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்ததால், கடந்த நவம்பர் மாதம் இலங்கை நீதிமன்றங்கள் மீனவர்களின் படகுகளை அழிப்பதற்கு உத்தரவிட்டன. அதன் பின்னரும் அவற்றை மீட்பதற்கு தமிழ்நாடு அரசும் மத்திய அரசும் நடவடிக்கைகள் எடுக்கவில்லை.மீனவர்கள் விவகாரத் தில் மத்திய அரசு காட்டிவரும் அலட்சியத்தால் மீண்டும் மீண்டும் நமது மீனவர்கள் இந்திய எல்லையிலேயே கைதுசெய்யப்படுவதும் இலங்கைக் கடற்படையின் தாக்குதலுக்கு உள்ளாவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் இன்றுவரை தொடர்கின்றன. இந் நிலையில், இலங்கை கடற் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்கவும், அவர்களது படகுகளை மீட்கவும் மத்திய அரசு முன்வர வேண்டும்” என வலியுறுத்தினார்.