tamilnadu

img

தமிழகத்தில் புதிதாக மேலும் 33பேருக்கு ஒமிக்ரான்!

தமிழகத்தில் புதிதாக 33 பேருக்கு ஒமிக்ரான் கொரோனா உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறையத்துவங்கிய நிலையில் தற்போது உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் உலகின் பல நாடுகளிலும் பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், ஒருவருக்கு ஏற்கனவே ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:
வெளிநாடுகளில் இருந்து வந்த 18,129 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், தமிழகத்தில் மரபணு மாற்ற சோதனை செய்ததில் 57 பேருக்கு மரபணு மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், 114 பேரின் மாதிரிகளும் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டதில் நேற்று இரவு மேலும் 60 பேரின் மரபணு சோதனை முடிவுகள் வெளியாகின. அதில், 33 பேருக்கு ஒமிக்ரான் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே ஒருவருக்கு உறுதியான நிலையில் மொத்தம் 34 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.  பாதிக்கப்பட்ட 34 பேரில் வெளிநாட்டு பயணிகளுடன் தொடர்பில் இருந்த 3 பேருக்கும், கேரளத்திலிருந்து வந்த ஒருவரும் ஒமிக்ரான் உறுதியாகியுள்ளது.
இதில் சென்னையில் 26 பேரும் , மதுரையில் 4 பேரும் , திருவண்ணாமலையில்  2 பேரும் , சேலம் மற்றும் கேரளத்தில்  1 ஒருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் லேசான அறிகுறி மட்டுமே உள்ளன. அனைவரும் நலமாக இருக்கின்றனர். 34 பேரில் 18 வயதுக்குள்பட்ட 2 பேரைத் தவிர மற்ற அனைவரும் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். 

;