tamilnadu

நவ. 26 பொது வேலை நிறுத்தத்திற்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆதரவு....

சென்னை:
இம்மாதம் 26 ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அன்றைய தினம் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு கருத்தாலும், கரத்தாலும் உழைக்கின்ற தொழிலாளர் வர்க்கம் 100 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிப் பெற்ற பல உரிமைகளைப் பறித்து வருகிறது. 44 தொழிலாளர் நலச் சட்டங்களை 4 சட்டங்களாகச் சுருக்கி பன்னாட்டு முதலாளிகளுக்கு ஆதரவாகவும், தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராகவும் மத்திய அரசு செயல் பட்டு வருகிறது. இதனால் தொழிலாளர்களின் பணிப் பாதுகாப்பு, ஊதியம், மருத்துவ வசதி, விடுப்பு, போனஸ், பணிக் கொடை உள்ளிட்ட உரிமைகளுக்கு பேராபத்து ஏற்பட்டுள் ளது.8 மணி நேர வேலை என்பது உலகத் தொழிலாளர் வர்க்கம் மிகக் கடுமையாகப் போராடி, இன்னுயிர் ஈந்து, ரத்தம் சிந்திப் பெற்ற உரிமை. அந்த உரிமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பல மாநிலங்களில் 8 மணி நேரம் வேலை என்பதை 12 மணி நேரமாக அதிகரித்துச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.இந்தியா முழுவதும் இதை நடைமுறைப் படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது.தமிழக அரசு மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற மறுத்து வருகிறது. ஜாக்டோ-ஜியோ போராட்டக் காலங்களில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது பழிவாங்கும் வகையில் போடப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் மற்றும் 17(ஆ) நடவடிக்கைகளைத் திட்டமிட்டு திரும்பப் பெற மறுத்து வருகிறது.

உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் போன்ற 50 ஆண்டு காலமாக ஆசிரியர்கள் பெற்றுவந்த உரிமைகளை தமிழக அரசு பறித்துள்ளது.புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், மத்திய, மாநில அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல், பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக நவம்பர் 26 வேலை நிறுத்தம் மிகவும் அவசியமானது என தமிழ்நாடு ஆரம் பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கருதுகிறது.கொரோனா பொது முடக்கச் சூழலில் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ள நிலையில் நவம்பர் 26 அகில இந்திய வேலை நிறுத்தத்தை ஆதரித்து தோழமைச் சங்கங்களுடன் இணைந்து வேலை நிறுத்த நாளன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆதரவு ஆர்ப்பாட்டங்களை நடத்திட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு முடிவு செய்துள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

;