திருவள்ளூர், ஜன.24- குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து திருச்சியில் பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெற உள்ள ‘தேசம் காப்போம்’ பேரணி விளக்கப் பொதுக் கூட்டம் திருவள்ளூர் பஜார் வீதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மேற்கு மாவட்டச் செயலாளர் சித்தார்த்தன் தலைமை தாங்கினார். இதில் விடுதலை சிறுத்தை கள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசிய தாவது:- நடிகர் ரஜினிகாந்த் நல்ல மனிதர். ஆனால் அவரை சிலர் கையில் எடுத்துக் கொண்டு பொம்மை போல் காட்டுகின்றனர். அவர் வரலாற்றை திரித்துக் கூறி விட்டு, அது மறைக்கக் கூடிய சம்பவம் அல்ல. மறக்கக்கூடிய சம்பவம் என்று கூறுகிறார். மறக்கக்கூடிய சம்பவம் என்று கூறும் ரஜினியால் இதுவரை யாரும் பேசாமல் இருந்த சம்பவத்தை இன்று ஏன் மக்களுக்கு நினைவுபடுத்துகிறார். பெரியார் குறித்து இழிவாக பேசி விட்டால் தமிழகத்தில் அனைத்து டிவி சேனல்களும் பத்து தினங்களுக்கு ரஜினியின் கருத்து குறித்து விவாதம் நடத்துவார்கள். இதனால் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் மாயமாக மறைந்துவிடும் என மக்களை திசை திருப்பவே இதுபோன்ற பேச்சுகளும், அறிக்கைகளும் வெளிவருகின்றன. துக்ளக் படிப்பவர்கள் மட்டும் அறிவாளி என்றால் பள்ளி கல்லூரிகளில் படிக்க வேண்டிய தேவையில்லையே. அனைவரும் துக்ளக் மட்டும் படித்துவிட்டு செல்லலாமே. சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் இந்த மூன்றும் சேர்ந்ததுதான் ஜனநாயகம். ஆனால் மத்திய மோடி அரசு சமத்துவத்தை உடைத்து சகோ தரத்துவத்தை பிளந்து ஜனநாயகத்தை படுகொலை செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.