tamilnadu

img

விவசாயிகளின் எழுச்சியில் முழுமையாக பங்கேற்போம்.... விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் அழைப்பு

சென்னை:
மத்திய அரசு கொண்டு வந்துள்ளகார்ப்பரேட் ஆதரவு புதிய வேளாண்சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் எழுச்சியில் விவசாயத் தொழிலாளர்களும் தொடர்ந்து பங்கேற்று வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக வரும் டிசம்பர் 8 மற்றும் 14ல் நடைபெறும் விவசாயிகள் நடத்தும் பந்த் மற்றும் முற்றுகைப்போராட்டங்களில் விவசாயத் தொழிலாளர்கள் திரளாக பங்கேற்க வேண்டுமென அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர், பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கைவருமாறு:

விவசாயிகளையும் - விவசாயத்தொழிலாளர்களையும் கடுமை யாகப் பாதிக்கும் வகையிலும் அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளின் நலனை பாதுகாக்கும் வகையிலும் புதிய வேளாண் சட்டங்களை நிறைவேற்றி செயல்படுத்திட மேற்கொண்டுள்ள நாசகர நடவடிக்கைகளைக் கண்டித்து நாடுமுழுவதும் கடந்த 3 மாதங்களாகவிவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்தியஅரசு விவசாய விரோதச் சட்டங்களை திரும்பப்பெற மறுத்து வரும்நிலையில், கடந்த 21ம் தேதி முதல்10 நாட்களாக புதுதில்லியில் கோடிக்கணக்கான விவசாயிகள் ஒன்றுதிரண்டு ஆவேசமிக்கப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். போராடும் விவசாயிகள் மீது அரசு தாக்குதலை நடத்தி வருகிறது. போராடும் விவசாயிகள் சங்கத் தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு பல கட்டங்களாக அழைத்துப் பேசியும், விவசாயிகள் விரோதச் சட்டங்களை திரும்பப் பெற மறுத்து வருகிறது.புதுதில்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து மாநிலங்களிலும் விவசாயிகளும் - விவசாயத் தொழிலாளர்களும் நாடு முழுவதும் போராடி வருகின்றனர். தமிழ்நாட்டிலும் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் தொடர்ந்து எழுச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கொரோனா, புயல் மற்றும் கடும் மழையிலும்நிறுத்தாமல் நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவுதெரிவித்து அனைத்து மாவட்டங்களிலும் விவசாயத் தொழிலாளர்களும் பங்கேற்று வருகின்றனர்.இந்நிலையில், போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக வரும் 8ம்தேதி அன்று, வேளாண் சட்டங்களை உடன் திரும்பப் பெறவேண்டும். மின் மசோதா 2020ஐ ரத்துசெய்ய வேண்டும் என வலியுறுத்தி நடைபெறும் நாடு தழுவிய முழுஅடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. அதேபோல் அனைத்து விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் வரும் டிசம்பர் 14 முதல் காத்திருப்புப் போராட்டமும் துவங்குகிறது.

இந்தப் போராட்டங்களுக்கும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் தனது முழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது. டிசம்பர் 8 மற்றும் 14ம் ஆகிய நாட்களில் நடைபெறும் விவசாயிகளின் தொடர் போராட்டங்களில் விவசாயத் தொழிலாளர்கள் முழு அளவில் பங்கேற்க வேண்டுமென தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.