tamilnadu

முற்போக்கு இலக்கிய இயக்க முன்னோடி கு.சின்னப்ப பாரதி தமுஎகச புகழஞ்சலி

சென்னை, ஜூன் 14- முற்போக்கு இலக்கியத்தின், இயக்கத்தின் முன்னோடி கு.சி.பா அவர்களை இழந்தோம் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் இரங்கல் தெரி வித்துள்ளது. சங்கத்தின் மாநிலத்தலைவர் (பொறுப்பு) மதுக்கூர் இராமலிங்கம், பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தை 1975 ஆம் ஆண்டு  தொடங்கிய முன்னோடிகள் 32 பேரில் ஒருவ ரான தோழர் கு.சின்னப்பபாரதி 13.06.2022 அன்று மாலை காலமானார் என்பதை பெருந்துயருடன் தெரிவித்துக்கொள்கிறோம். செம்மலர் மாத இதழில் எழுதிக்கொண்டிருந்த எழுத்தாளர்கள் தான் மதுரையில் மோட்டார் யூனியன் அலுவலகத்தில் கூடி தமுஎச என்கிற அமைப்பைத் தொடங்கினார்கள். செம்மலர்  மாத ஏட்டினைத் தன் சொந்தச் செலவில் உருவாக்கி நடத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் ஒப்படைத்தவர் தோழர் கு.சின்னப்ப பாரதி.
எழுத்துக் கொடைகள்
எழுத்தாளர் சங்கம் துவக்கப்பட்ட நாள் முதல் அவர் காலமான நேற்று வரை சங்கத்தின் தலைவர்களில் ஒருவராக கொள்கைப்பிடிப்பு டன் வாழ்ந்தார். இடதுசாரி இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான அவரது முதல் நாவலான “தாகம்” வர்க்கப்போராட்டத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட முதல் நாவல்களின் வரிசையில் முன்னிற்பதாகும். தாகத்தைத் தொடர்ந்து அவரது சங்கம், சர்க்கரை, பவளாயி, தலைமுறை மாற்றம்,  சுரங்கம், பாலைநில ரோஜா ஆகிய நாவல்கள் அடுத்தடுத்து வந்தன. கௌரவம், சின்னப்பபாரதி கதைகள் போன்ற சிறுகதைத்தொகுப்புகளும் சின்னப்பபாரதி கவிதைகள் தொகுப்பும் தெய்வமாகி நின்றாள் என்கிற நெடுங்கவிதையும் அவர் அளித்துள்ள எழுத்துக்கொடைகளாகும்.
ஆங்கிலத்தில் இலக்கிய இதழ்
கரும்பு விவசாயிகள் சங்கத்தை உரு வாக்கிய முன்னோடிகளில் ஒருவரான இவர் 1960களில் விவசாயிகள் சங்கத்தில் தீவிரமாகப் பணியாற்றினார். தோழர் பி.சீனிவாசராவ் தலைமையில் நில உச்ச வரம்புக்காக கோவையிலிருந்து சென்னைக்குச் சென்ற நடைப்பயணக் குழுவில் இவரும் ஒருவராக நடந்துள் ளார். பி.சீனிவாசராவ், என். சங்கரய்யா, ஆர். கே.கண்ணன் போன்ற மார்க்சியத்தலைவர் களுடன் நெருக்கமான உறவு கொண்டிரு ந்தவர். அகில இந்திய அளவில் முற்போக்குப் படைப்பாளிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்கிற ஆசையில் அவர் ஆங்கி லத்தில் ILA Quarerly (Indian Literature and  Art-quarterly) என்கிற காலாண்டு இலக்கிய  இதழை ஆங்கிலத்தில் நடத்தினார். இது போன்ற முன்முயற்சிகளை இயக்கத்துக்காகச் செய்வதில் இறுதிவரை ஆர்வம் காட்டினார்.
13 மொழிகளில் படைப்புகள்
 இவருடைய படைப்புகள் இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராட்டி, குஜராத்தி, வங்காளி, ஆங்கிலம், பிரஞ்ச், டேனிஷ், சிங்களம், உஸ்பெக், சமஸ்கிருதம் ஆகிய 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சீனா, இலங்கை, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்குப் பயணம் செய்து அங்குள்ள இடதுசாரி எழுத்தாளர்களுடன் உரையாடல் நடத்தி தொடர்புகளை பேணியவர். 
விருதுகள்
இலக்கியச்சிந்தனை விருது, கலைஞர்  பொற்கிழி விருது உள்ளிட்ட பல விருது களைப் பெற்றவர். அவருடைய நண்பர் களால் உருவாக்கப்பட்ட கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை வழியே பல படைப் பாளிகளுக்கும் சமூக சேவகர்களுக்கும் விருதுகள் வழங்கிட வழிவகுத்தவர். பிற்காலத்தில் அந்த அறக்கட்டளையின் நிதி முழுவதையும் தமுஎகசவிடம் ஒப்படைத்து இனி அமைப்பே இந்த விருதுகளை வழங்கும் படி செய்தார். இந்த நிதியிலிருந்தே முற்போக்குக் கலை இலக்கிய இயக்கத்துக்கு வாழ்நாள் பங்காற்றிய ஒருவருக்கு ஆண்டு தோறும் ரூபாய் ஒரு லட்சம் விருதாக தமுஎகச வழங்கி வருகிறது. நாமக்கல் மாவட்டம் பொன்னேரிப்பட்டி என்கிற கிராமத்தில் 05-05-1935இல் குப்பண்ணன் -பெருமாயி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்து நாமக்கல்லில் அவரது இணையர் செல்லம்மாளுடன் வாழ்ந்து வந் தார். கல்பனா, பாரதி ஆகிய இரு புதல்விகள் அவருக்கு. அவருடைய மறைவு மார்க்சிய இயக்கத்துக்கும் முற்போக்கு இலக்கிய இயக்கத்துக்கும் மாபெரும் இழப்பாகும். தனது முன்னோடியை இழந்து தமுஎகச தவித்து நிற்கிறது. அவருடைய மறைவால் துயருற்று நிற்கும் அவரது குடும்பத்தாருக்கும் தோழர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்து அவருக்கு வீரவணக்கம் செலுத்துகிறது தமுஎகச என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

;