tamilnadu

img

வேர்களைப் போல செயல்பட்டவர் ‘கருணா’: தலைவர்கள் புகழாரம்....

சென்னை:
வேர்களைப் போல செயல்பட்டவர் தோழர் கருணா என தலைவர்கள் புகழாரம் சூட்டினர்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் துணைப்பொதுச் செயலாளர் கருப்பு கருணா (எ) எஸ்.கருணா டிச.21 அன்று மாரடைப்பால் காலமானார்.அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்வு புதனன்று (டிச.30) சென்னையில் நடைபெற்றது. தமுஎகச சென்னை மாவட்டக்குழுக்கள் இந்நிகழ்வை நடத்தின.இக்கூட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், “கருத்துமாறுபாடு இருந்தாலும் உறவாடுவதற்கான இடமும், உரையாடுவதற்கான மொழியும் அவரிடம் இருந்தது. பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினருக்கு எதிராக இழிச்சொற்கள், தவறான கருத்துக்கள் வெளிப்படும்போது அதற்கெதிராக சமரசமற்று எதிர்த்து நின்றார்” என்றார்.

தமுஎகச பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா குறிப்பிடுகையில், “கருணா பிறவி தலைவனாகவும், அமைப்புக்கு மூலவிசையாகவும் இருந்தார். வேர்களை போல் செயல்பட்டார். கருணாவை இழந்த சோகம் கூட மாறாத நிலையில், அவரது இணையர் செல்வி, தனது மகனை இயக்கத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்கிறார். அந்தளவிற்கு குடும்பத்தையும் கொள்கைபிடிப்பானதாக மாற்றி வைத்துள்ளார்” என்றார்.இக்கூட்டத்தில் பேசிய தலைவர்கள், “தான் கொண்ட கொள்கைக்கு நேர்மையாக இருந்தார் கருணா. தமுஎகச-வின் முகமாக விளங்கினார். சமூக ஊடகங்களில் அவரது பதிவுகள் காத்திரமானவை.

எழுத்தாளர், கலைஞர், களச்செயல்பாட்டாளர் என முப்பரிமாணத்தோடு இயங்கினார். யார் வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற வேலைகளை அவர் செய்யவில்லை. மாறாக, யாரும் இட்டு நிரப்ப முடியாத பணிகளை செய்து முடித்தார்.
வாழும் போதும் உடல், உழைப்பு அனைத்தையும் சமூகத்திற்கு கொடுத்த அவர், இறந்த பின்பும் உடலை மருத்துவமனைக்கு தானமாக கொடுத்தார். இயக்கத்தோடு இரண்டறக் கலந்து வாழ்ந்த அவர், இறப்பதற்கு முன் கடைசியாக அவர் “எஸ்.கருணா, மெம்பர் ஆப் கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்திய மார்க்சிஸ்ட்” என்றார். கருணாவின் மனிதநேயத்தை வரித்துக் கொள்வோம். 10 வருடங்களாக தொடர்ந்து சர்வதேச திரைப்பட விழாவை முன்னின்று நடத்தினார். அந்த திரைப்பட இயக்கத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்” என்றனர்.

இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, தமுஎகச மூத்த தலைவர் சிகரம் ச.செந்தில்நாதன், நிர்வாகிகள் நாடகவியலாளர் பிரளயன், கி.அன்பரசன், பிரகதீஸ்வரன், இரா.தெ.முத்து, சைதை ஜெ. பாலாஜி, மணிநாத், பகத்சிங் கண்ணன், ராஜசங்கீதன், ஹேமா, பேரா.வெண்மணி, இயக்குநர் சிவக்குமார், மலர்விழி, எடிட்டர் பி.லெனின், ஓவியர் மருது, இயக்குநர் ராஜூ முருகன், எழுத்தாளர் அ.ஜெயன்பாலா, ஆன்மன், பவா சமத்துவன், யூடூ புரூட்டஸ் மைனர், சுசீலா உள்ளிட்டோர் பேசினர்.

;