சென்னை,டிச.31- அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்படியான வசதிகளை செய்துகொடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி, மாநிலப் பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன் ஆகியோர் முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மத்திய மோட்டார் வாகன திருத்த சட்டம்-2019 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அதற்குரிய இறுதிப்படுத்தப்பட்ட விதிகளுக்கான அறிவிக்கையை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை டிசம்பர் 27ல் வெளியிட்டுள்ளது. 2020 மார்ச் 1-ஆம் தேதி முதல் இந்தச் சட்டத் திருத்த விதிகள் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் முன்னுரிமை இருக்கைகள், சக்கர நாற்காலிகள் வந்து செல்ல வசதியான நுழைவாயில், ஊன்றுகோல் உள்ளிட்ட உபகரணங்களை பாதுகாப்பாக வைப்பது, கைப்பிடிகள் அமைப்பது, சைன் அறிவிப்பு ஆகிய வசதிகளை ஏற்படுத்த இந்த சட்டத் திருத்த விதிகள் வகை செய்கிறது. மாற்றுத் திறனாளிகள், நடக்கும் திறன் குறைந்த பயணியர் ஆகியோருக்கான இந்த வசதிகள் உள்ளனவா, இல்லையா என்பது பற்றி பேருந்துகளின் தகுதி ஆய்வின்போது உறுதி செய்ய இந்த திருத்த சட்ட விதிகள் வலியுறுத்துகின்றன. இதற்கான வரைவு விதிகள் 2019 ஜூலை 26 அன்று வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தனியார் பேருந்துகளிலும்
இந்த திருத்தச் சட்ட விதிகளை முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழக அரசும், போக்குவரத்துறையும் உரிய நடவடிக்கைகளை இப்போதிருந்தே எடுக்க வேண்டும். குறிப்பாக, அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் மட்டுமல்லாது, தனியார் பேருந்துகளிலும் மாற்றுத்திறனாளி களுக்குரிய போக்குவரத்து சட்ட உரிமைகள் நிலைநாட்டப்பட தமிழக முதலமைச்சர் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.