tamilnadu

img

மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் முறைகேடா? அமைச்சர் விளக்கம்....

சென்னை:
மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்ட புகாருக்கு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, மருத்துவப் படிப்பில் சேர வெளிமாநிலத்தவர்கள் விண்ணப் பித்திருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய புகார் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், “கலந்தாய்வை பொறுத்தமட்டில், ஏற்கனவே வெளிப்படை தன்மையுடன் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. யார் என்ன ரேங்க்? என்று எளிதாக பார்த்துவிடலாம்” என்றார்.
தமிழகத்தில் தான் வெளிப்படையான கலந்தாய்வு நடக்கிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்காக பல்வேறு குழுக்கள் அமைக் கப்பட்டுள்ளன. பொதுவாகவே 2 மாநிலங்களில் விண்ணப்பிக்க உரிமை உண்டு. இருப்பிட சான்றிதழ் என்பதை ஒரு மாநிலத்தில் தான் கோரமுடியும். திறந்தவெளி போட்டியில் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். 

ஆனால் இருப்பிட சான்றிதழ் என்பது குறைந்தபட்சம் இங்கே 7 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும், அதற்கான சான்றிதழ் வேண்டும், பெற்றோர் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இதையெல்லாம் ஆய்வு செய்யத்தான் கொரோனா காலத்திலும் இந்த கலந்தாய்வு நேரடியாக நடக்கிறது. 0.0001 சதவீதம் கூட பிரச்சனை நடந்து விடக்கூடாது, சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறோம். விதிமுறைகள், வழிமுறைகள், நெறிகாட்டு முறைகள் தெளிவாகவே இருக்கிறது என்றும் அவர் கூறினார்.இடஒதுக்கீட்டில் முறைகேடு செய்து வருபவர்கள் கண்டறிந்தால் நடவடிக்கை எடுக்கப்படுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அதற்கு தான் குழு அமைக்கப்பட்டுள்ளது. மிக சிறப்பாக கலந்தாய்வு நடந்துள்ளது. எந்த விதமான சிறு சந்தேகங்களுக்கும் இடமில்லை. விளக்கம் பெறவும் ஹெல்ப் டெஸ்க் (உதவி மையம்) உள்ளது” என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.