திங்கள், மார்ச் 1, 2021

tamilnadu

img

கொரோனா எதிர்ப்பு பணியில் மக்களை பாதுகாத்த தூய்மைப் பணியாளர்களை சட்ட விரோதமாக வேலை நீக்கம் செய்வதா? - சிபிஎம்

கொரோனா எதிர்ப்பு பணியில் மக்களை பாதுகாத்த தூய்மைப் பணியாளர்களை
சட்ட விரோதமாக வேலை நீக்கம் செய்வதா? உடனடியாக  அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்
என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.  இதுகுறித்து கட்சியின்
மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

சென்னை, மாநகராட்சி கடந்த 11 ம் தேதி பத்தாண்டுகளுக்கும் மேலாக வேலை
செய்துவந்த NULM ஒப்பந்த தொழிலாளர்கள் 710 பேரை எந்தவித
முன்னறிவிப்புமின்றி சட்ட விரோதமாக வேலையை விட்டு நீக்கியுள்ளது.
கொரோனா நோய்த் தொற்று எதிர்ப்பு பணியில் தங்களின் உயிரை பணயம்
வைத்து மக்களை பாதுகாத்த இவர்களை சட்டவிரோதமாக வேலை நீக்கம்
செய்துள்ள சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் மோசமான நடவடிக்கையை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக
கண்டிக்கிறது.
சென்னை பெரு வெள்ளம், வார்தா புயல் போன்ற பேரிடர் காலங்களில்
முன்னின்றவர்கள் இந்த தூய்மைப் பணியாளர்கள். கொரோனா நோய்தொற்றால்
பாதிக்கப்பட்ட பல லட்சக்கணக்கான நோயாளிகளின் கழிவுகளை அகற்றி
மக்களின் உயிரைப் பாதுகாத்தவர்கள். இவர்களில் பணியின் போது பாதிக்கப்பட்டு
உயிர் நீத்தவர்கள் சென்னையில் மட்டும் 19 பேர். தமிழகம் முழுவதும் பல நூறு
பேர்கள். கொரோனாவிலிருந்து காப்பவர்கள் இவர்களென மக்கள் பல இடங்களில்
இவர்களுக்கு மாலையணிவித்து, கைதட்டி மரியாதை செலுத்தினர்.
ஆனால், சென்னை, மாநகராட்சி நிர்வாகம் கொரோனா களப்பணியாளர்களை மிக
அநீதியாக பொங்கல் பண்டிகையின் போது வேலையைப் பறித்துள்ளது. சென்னை
மாநகராட்சியில் உள்ள சிஐடியு, செங்கொடி சங்கம் பத்தாண்டுகளுக்கும் மேலாக
வேலை செய்தும், நிரந்தரப்படுத்தப்படாமல் உள்ள NMR மற்றும் NULM
தொழிலாளிகளை நிரந்தரப்படுத்த வேண்டுமெனக் கோரி சென்னை உயர்நீதி

மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. வழக்கு எண் W.P.NO.4407 /2014 ,
W.P.NO.87/2019 மற்றும் W.M.P.NO.105/2019). வழக்கு விசாரணையில் வேலை
செய்பவர்கள் குறித்த பட்டியல் இருதரப்பும் சரிபார்ப்பதற்கான நிலையில் உள்ளது.
இந்நிலையில் NULM ஒப்பந்த தொழிலாளர்களை வேலையை விட்டு
நீக்கியுள்ளது சட்ட விரோதமாகும்.
எனவே, பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும்
உடனடியாக மீண்டும் பணியில் அமர்த்த வேண்டுமெனவும்; நிரந்தரமாக உள்ள
துப்பரவு பணியை தனியாருக்கு காண்டிராக்ட் விடக் கூடாது எனவும், பல
ஆண்டுகளாக வேலை செய்யும் துப்புரவு பணியாளர்கள் அனைவரையும் பணி
நிரந்தரப்படுத்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகராட்சி
நிர்வாகத்தை வலியுறுத்துகிறது.

;