பிரக்யாராஜ்:
உத்தரப் பிரதேசத்தில் விஷச் சாராயம் குடித்த 6 பேர் பலியாகி உள்ளனர். 15 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.உத்தரப் பிரதேசத்தின் பிரக்யாராஜ் நகரில் உள்ள அமிலியா கிராமத்தில் மதுக்கடை ஒன்றில் வெள்ளி இரவு சிலர் மதுபானம் வாங்கி குடித்துள்ளனர். இதில், பலரது உடல்நிலை மோசமடைந்து உள்ளது. இதனை தொடர்ந்து அவர்களில் 6 பேர் பலியாகி உள்ளனர்.
15 பேர் வரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மதுக்கடையை நடத்தி வரும் கணவன் மற்றும் மனைவி இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.இதனை தொடர்ந்து மாவட்ட அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று கிராமத்திற்கு சென்றுள்ளது. மதுபான மாதிரிகள் ஆய்வக பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. அதன் முடிவில் அடுத்த கட்டவிசாரணை நடைபெறும் எனஅவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், உத்தரப்பிரதேசத்தின் லக்னோ, பிரோசாபாத், ஹாப்பூர், மதுரா மற்றும் பிரக்யாராஜ் நகரங்களில் விஷச் சாராயத்திற்கு பலர் பலியாகி உள்ளனர்.இதேபோன்று ஆக்ரா, பாக்பத் மற்றும் மீரட் நகரங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. விஷசாராய கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசு ஏன் தவறுகிறது? இதற்கு யார் பொறுப்பு? என தெரிவித்து உள்ளார்.கடந்த ஆண்டு, உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகண்டில் விஷச் சாராயத்திற்கு 100க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதன் தொடர்ச்சியாக சட்டவிரோத வகையில் சாராயம் விற்ற130 பேர் கைது செய்யப்பட்டனர்.கடந்த 2011ம் ஆண்டில் இருந்து இதுவரை 8 விஷ சாராய சம்பவங்களில் 175 பேர் உயிரிழந்து உள்ளனர்.