திருவனந்தபுரம்:
அரசுக்கு சொந்தமான நிறுவனமான கேரள எலக்ட்ரிக்கல் அண்ட் அலையட் இன்ஜினியரிங் கம்பெனி (கேஇஎல்) 12 ஆண்டுகளுக்குப் பிறகு லாபம்ஈட்டியுள்ளது. இந்த நிதியாண்டின் முதல் பாதியில் கெல் ரூ.70 லட்சம் லாபம் ஈட்டியதாக அமைச்சர் இ.பி.ஜெயராஜன் தெரிவித்தார். எர்ணாகுளம் மாமலா பிரிவில் மட்டும் ரூ.77 கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளது.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கெல் நிறுவனம் கடைசியாக 2007-2008 நிதியாண்டில் லாபம் ஈட்டியது. தமிழ்நாடு மின்சார வாரியத்திடமிருந்து ரூ.111 கோடி மதிப்புள்ள ஆர்டர்களை சரியான நேரத்தில் முடித்து கொடுத்தது லாபத்திற்கு வழி வகுத்தது. இதற்காக அரசாங்கம் மூலதனத்தை வழங்கியது. நிறுவனத்தின் குண்டறா, மாமலா பிரிவுகளின் நவீனமயமாக்கலும் முன்னேற்றத்துக்கு உதவியது. ரூ.18 கோடி மதிப்பிலான மேம்பாட்டு நடவடிக்கைகளை இரண்டு பிரிவுகளாக அரசு மேற்கொண்டது.கே.எஸ்.இ.பி. மற்றும் பிற மாநில மின்சார வாரியங்களுக்கு விநியோக மின்மாற்றிகளை கெல் தயாரித்து வழங்குகிறது. கொல்லம் குண்டறா பிரிவில் ரயில்வேக்கு தேவையான பொருட்கள் தயாரிக்கப்படு கின்றன. மேலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தூக்கு பாலங்கள், பிற சிவில் பணிகள்மற்றும் பல்வேறு சுற்றுலா திட்டங்களை நிர்மாணிப்பதை நிறுவனம் மேற்கொள்கிறது.
மாநில அரசு செயல்படுத்தும் வளர்ச்சிமற்றும் கட்டுமான திட்டங்களை செயல்படுத்தநோடல் நிறுவனமாக கெல் நியமிக்கப் பட்டது. இதன் மூலம் எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டுத் திட்டங்கள், உள்ளாட்சித்துறையின் பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகள், சுற்றுலா மையங்களில் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நடவடிக்கைகள், எஸ்.சி.எஸ்.டிகுடியிருப்பு களின் மறுவாழ்வு மற்றும் ஸ்மார்ட் பள்ளி திட்டங்கள் மேற்கொள்ளப் பட்டன. இது லாபத்தை ஈட்ட உதவியது.நிறுவனத்தின் மாமலா பிரிவு தொழில்துறை அளவில் மின்மாற்றிகள் உற்பத்தி செய்யும் திட்டத்தை முடித்து, சோதனை அடிப்படையில் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் முழு அளவில் உற்பத்தி தொடங்கும். இந்த ஆலை தொடங்குவதன் மூலம், ரூ.47 கோடி கூடுதல் வருவாய் மற்றும் 2.53 கோடி நிகர லாபம் எதிர்பார்க்கப்படுகிறது. மின்சார வாகனங்களுக்கான மோட்டார்கள் தயாரிக்க குண்டறா பிரிவில் ஒரு ஆலை அமைக்கும் பணி நடந்து வருகிறது என்றும் அமைச்சர் கூறினார்.