tamilnadu

img

25 கோடி தொழிலாளர் வேலைநிறுத்தம் தமிழகத்தில் மாபெரும் வெற்றி மறியல் போரில் லட்சம் பேர் கைது

சென்னை, ஜன. 8- மத்திய பாஜக அரசின் தொழிலாளர் விரோத மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து நாடு தழுவிய அளவில் புதனன்று நடைபெற்ற வேலைநிறுத்தம் தமிழகத்திலும் எழுச்சியோடு நடைபெற்றது. ரயில்வே, இன்சூரன்ஸ், பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கக்கூடாது; 44 தொழிலாளர் நலச்சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றியிருப்பதைக் கைவிட வேண்டும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவேண்டும்; குறைந்தபட்ச ஊதியம்  21 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும்; புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; மோட்டார் வாகன சட்டம் 2019ஐ கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, தொமுச, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்கள், அனைத்து துறைவாரி சம்மேளனங்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர் சங்கங்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்  சங்கங்கள் உள்பட 60 அமைப்புகள் சார்பில் புதனன்று (ஜன. 8) நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.
அண்ணாசாலை
அதன் ஒரு பகுதியாக சென்னை அண்ணாசாலை தலைமை தபால் நிலையம் அருகே சாலை மறியல் நடை பெற்றது. இதில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலக் குழு உறுப்பினர்கள் க.பீம்ராவ், ஏ.பாக்கியம், தொமுச பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம், தலைவர் சுப்புராம், பொருளாளர் கி.நடராஜன், ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி, ஆதிகேசவன், அமெரிக்கை நாராயணன் (ஐ.என்.டி.யு.சி), விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், சாய்குமார் (ஏ.ஐ.யு.டி.யு.சி), இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மு.வீரபாண்டியன், சுசிலா, சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, சிஐடியு மாவட்டச் செயலாளர்கள் சி.திரு வேட்டை, பாலகிருஷ்ணன், தலைவர்கள் பொன்முடி, எஸ்.கே.மகேந்திரன், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரத்தினமாலா, திருப்பதி (அகில இந்திய பார்வர்டு பிளாக்) உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அனை வரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
திருவொற்றியூரில் ஜி.ராமகிருஷ்ணன் கைது 
திருவொற்றியூர் தபால் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் மறியல் நடைபெற்றது. இதில் வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ஜெயராமன், டி.கே.சண்முகம், விஜயகுமார்,  ஆர்.லோகநாதன், சதீஷ் (புதிய ஜனநாயகம் முன்னணி), கே.ஆர்.முத்துசாமி (சிஐடியு), சேகர் (எம்ஆர்எப் சீரமைப்பு இயக்கம்) உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அம்பத்தூர்
தொழிற்பேட்டைகள் நிறைந்துள்ள அம்பத்தூரில் தலைமை தபால் நிலையம் அருகே அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சு.லெனின்சுந்தர், பி.என்.உண்ணி, கே.ரவிச்சந்திரன் (சிஐடியு), எம்.ராமகிருஷ்ணன், ராணி, சி.சுந்தரராஜ், சு.பால்சாமி, ம.பூபாளன், ஆர்.ராஜன் (சிபிஎம்), பி.மாரியப்பன், ஆர்.துரைசாமி (ஏஐடியுசி), அருள்செல்வன், எஸ்.தசரதன் (தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு) உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மோட்டார் வாகனம்
தமிழ்நாடு மோட்டார் வாகன தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே சங்கத்தின் தலைவர் ஏ.ராயப்பன் தலைமையில் நடைபெற்ற மறியலில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வெறிச்சோடிய மத்திய அரசு அலுவலகங்கள்
வருமானவரித் துறை ஊழியர் சங்கம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுந்தரமூர்த்தி, வருமான வரித் துறை அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சிதம்பரம், மத்திய அரசு ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமானோர்  கலந்து கொண்டனர். 100 விழுக்காடு ஊழியர்கள் வேலை  நிறுத்தத்தில் பங்கேற்றனர். தபால் துறையிலும் 95 விழுக்காடு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற னர். இதேபோல் கணக்கு மற்றும் தணிக்கை துறை அலு வலகம், தபால், ஜிஎஸ்டி உள்பட பல மத்திய அர சு அலுவலகங்களிலும் முழு வேலை நிறுத்தம் நடைபெற்ற தால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
மாணவர்கள்
சிசிஏவுக்கு எதிராக தேசிய அளவில் உருவாக்கப் பட்டுள்ள மாணவர் சங்கங்களின் கூட்டமைப்பான யங்  இந்தியா சார்பில் சென்னை அண்ணா சாலை பெரியார் சிலை அருகே சாலை மறியல் நடைபெற்றது. திமுக மாண வர் அணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ., இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன், மாநில நிர்வாகி ஜான்சி, மாவட்டச் செயலாளர்கள் தீ.சந்துரு, இசக்கி நாகராஜ், அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாநிலச் செயலாளர் தினேஷ், பெரியார் என்னரசு (திராவிடர்  கழக மாணவர் அணி), சுகுபாலா (அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்கம்), சங்கர் (மதிமுக மாணவர் அணி) உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
வங்கி, இன்சூரன்ஸ், மாநில அரசு ஊழியர்கள்
வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு, பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், இன்சூரன்ஸ், அரசு ஊழியர்  சங்கம் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சி.எச்.வெங்கடாசலம், சி.பி.கிருஷ்ணன், இ.அருண்குமார், கே.கிருஷ்ணன் (வங்கி), செல்லப்பா (பி.எஸ்.என்.எல்), அன்பரசு (அரசு ஊழியர் சங்கம்), செந்தில்குமார் (இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்), கே.கோவிந்தன் (ஜெனரல் இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்), சூரியநாராயணராவ், கணேசன் (அதிகாரிகள் சங்கம்), விஜயகுமார் (அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு) உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
சுங்கத்துறை ஊழியர்கள்
மத்திய அரசு சுங்க அதிகாரிகள் சங்கத்தின்  சார்பில் சென்னை சுங்க இல்லத்தில் சுங்க அதிகாரி சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலால்துறை அதிகாரிகள் சங்க நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, மோகன், டைடஸ் சாமுவேல், சுங்கத்துறை ஊழியர் சங்க நிர்வாகி கலியமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஐசிஎம்ஆர் ஊழியர்கள்
தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவன ஊழியர்கள் சங்கம் சார்பில் சென்னை சேத்துப்பட்டில் தலைவர் கென்னடி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்  மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொதுச் செய லாளர் எம்.துரைபாண்டியன், தபால் ஊழியர் சம்மேளன ஒருங்கிணைப்பாளர் ஆர்.பி.சுரேஷ் குமார், கிருபாகரன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கல்பாக்கம் அணுமின் நிலையம் 
கல்பாக்கம் அணுமின் ஆற்றல் ஊழியர் சங்கத்தின் தலைவர் தனஞ்செழியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், பாபா அணு ஆராய்ச்சி மையம், பாவினி தொழிற்சங்க ஊழி யர்கள், பொதுப்பணித் துறை ஊழியர்கள், கூட்டுறவு பண்டக சாலை ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செங்கொடி சங்கம்  
சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் செங்கொடி சங்கம் சார்பில் துணைத் தலைவர் எல்.சுந்தரராஜன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் பி.சீனிவாசலு, துணைப் பொதுச்செய லாளர்கள் டி.ராஜன், ஜி.முனுசாமி, கே.தேவராஜ் உள்ளிட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
10 நிமிடம் வாகனங்கள் நிறுத்தம்
வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து 12 மணி  முதல் 12.10 வரை வாகனங்களை நிறுத்தி ஆதரவு அளிக்குமாறு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் விடப்பட்ட கோரிக்கையை ஏற்று தாம்பரம், நந்தனம், தி.நகர், கே.கே.நகர், வடபழனி 100 அடி சாலை,  திருவான்மியூர் சுங்கச்சாவடி, டைடல் பார்க், போரூர், அய்யப்பன் தாங்கல், பல்லவன் சாலை, பேசின் பிரிட்ஜ், ஓட்டேரி, அண்ணாநகர், அம்பத்தூர், வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி ஆகிய 16 மையங்களில் பேருந்துகள், ஆட்டோக்கள், கால்டாக்சி, மோட்டர் சைக்கிள் என 1,800 வாகனங்கள் 10 நிமிடங்கள் நிறுத்தப்பட்டன. இதில் தாம்பரத்தில் 50 பேரையும், அய்யப்பந்தாங்கலில் 50 பேரையும், வடபழனியில் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதில் சாலை போக்குவரத்து சம்மேளனம், மோட்டர் வாகன தொழிலாளர்கள் சங்கம், ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநர் சங்கம், இருசக்கர வாகனம் பழுது பார்ப்போர் சங்கத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கே.பாலகிருஷ்ணன் கைது 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திருப்பூரில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்று கைதானார். கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் பி.ஆர்.நடராஜன் கோயம்புத்தூரிலும், சு.வெங்கடேசன் மதுரை மாநகரிலும் நடைபெற்ற மறியல் போராட்டங்களில் பங்கேற்று கைதாகினர். சிபிஐ திருப்பூர் மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன் கோயம்புத்தூரில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்று கைதானார். தமிழகம் முழுவதும் தொழிற்சங்கத் தலைவர்கள், இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் உட்பட மறியல் போராட்டங்களில் சுமார் 1 லட்சம் பேர் கைதாகினர்.