tamilnadu

img

மக்கள் தொகை பதிவேடு கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டாம்.. இந்தியத் தொழிலாளர்களுக்கு சிஐடியு வேண்டுகோள்

சென்னை:
சென்னையில் நடைபெற்று வரும் சிஐடியு அகில இந்திய மாநாட்டில் பல முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக டாக்டர் கே.ஹேமலதா தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் மாநாட்டு வளாகத்தில் வெள்ளியன்று (ஜன.24)  செய்தியாளர்களிடம் அகில இந்திய தலைவர் ஹேமலதா கூறியதாவது: சிஐடியு அகில இந்திய 16வது மாநாடு சென்னையில் ஜன.23ஆம் தேதி தொடங்கி வரும் 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது. துவக்க நாளன்று கொடியேற்றுதலோடு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 124வது பிறந்தநாளை முன்னிட்டு மாநாட்டுத் திடலில் அவரதுஉருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அவருடைய அடிப்படை நோக்கங்களுக்கும் லட்சியங்களுக்கும் அவர் முன்வைத்த அடிப்படை சித்தாங்களுக்கு எதிரான தாக்குதல் இப்போது தொடுக்கப்பட்டுள்ளது. அவருடைய நோக்கங்களையும் லட்சியங்களையும் காப்பாற்றுவோம் என்று நாங்கள் உறுதி ஏற்றோம். மாநாட்டில் முக்கியமான 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஒன்று, குடியுரிமை திருத்தச்சட்டத்தை (சிஏஏ) அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்தச்சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று சிஐடியு கோருகிறது. தேசியமக்கள்தொகை பதிவேடு(என்.பி.ஆர்)  தேசிய குடியுரிமை பதிவேடு (என்ஆர்சி) ஆகிய  இரண்டும்அமல்படுத்தப்படும் என்று அரசு அறி வித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு (சென்சஸ்) மட்டும் பதில் அளிப்போம். ஆனால் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும் தேசிய குடியுரிமை பதிவேட்டிற்கும் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்க மாட்டோம் என்று மாநாடு தெளிவாக முடிவெடுத்துள்ளது.  இதுதான் சிஐடியு ஊழியர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் இந்த மாநாடு விடுக்கும் அறைகூவல் ஆகும். இது தொழிலாளர்களின் ஒத்துழையாமை இயக்கமாகும். இதுவொரு முக்கியமான தீர்மானம்.
அந்த சட்டத்தின் மிகக் கொடுமையான விஷயம் என்னவென்றால் முஸ்லீம்களுக்கு எதிரானது. அவர்களைப் பாகுபடுத்துகிறார்கள் என்பது மட்டுமல்ல, அதே நேரத்தில் இந்தியா போன்ற நாட்டில் ஏராளமான அமைப்பு ரீதியாகத்திரட்டப்படாத ஏழை எளிய தொழிலாளிகளுக்கு பிறப்புச்சான்று உள்பட எந்தச்சான்றும் கிடையாது. அப்பா பிறந்த இடம், தாத்தா பிறந்தஇடம் எதுவும் தெரியாது. இப்படி கோடிக்கணக் கான மக்கள் பாதிக்கப்படுவார்கள். என்பிஆர் பதிவேட்டிற்குத் தகவல்களைச் சேகரிக்கக்கூடிய அலுவலர், ‘இவர் டவுட்ஃபுல’ அதாவது, ‘சந்தேகத்திற்கு உரியவர்’ என்று விண்ணப்பத் தாளில் எழுதிவிட்டால் நான் இந்த நாட்டின் குடிமகன் தான் என்று நிரூபிக்கவேண்டியது சம்மந்தப்பட்ட நபரின் பொறுப்பாகிவிடும். இந்தநாட்டின் குடிமகன் நான் இல்லை என்று அரசுகூறினால் அவர்கள் தானே அதை நிரூபிக்க வேண்டும்?ஆனால், நான்தான் நிரூபிக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. எனவே டவுட்ஃபுல் என்று சொன்னாலே நிலைமை சிக்கலாகி விடும். இந்த கொடூரமான முறையை ஏற்கமுடியாது என்ற மாநாடு தீர்மானித்துள்ளது.மாநாட்டில் பொதுச்செயலாளர் தாக்கல் செய்த அறிக்கை மீது விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள  சர்வதேச நிதி நெருக்கடி காரணமாக புதிய முதலீடுகள் உருவாகவில்லை; வேலையின்மை நிலவுகிறது. ஐஎம்எஃப் போன்ற உலக நிறுவனங்களே கடுமையான வேலையிழப்புகள் ஏற்பட்டு வருவதை  ஒப்புக்கொண்டுள்ளன. புதிய வேலை வாய்ப்பு இல்லை என்பதை உணருகிறார்கள். அதேபோல் வருமான ஏற்றத்தாழ்வு பெருமளவு அதிகரித்துள்ளது. அதனுடைய பாதிப்புகள் இந்தியாவிலும் எதிரொலிக்கிறது.

இதேகாலத்தில் பல நாடுகளில் வலதுசாரி சக்திகள் வெற்றி பெறுகின்றன. பிரேசில் நாட்டில் ஜெய்ர் பொல்சானாரோ அப்படித்தான் வெற்றி பெற்றார். அவர்கள் இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கான வழி என்று பலவிதமான தவறான வழிகளைச் சொல்கிறார்கள். இனவெறியைத் தூண்டுகிறார்கள். மதவெறியைத் தூண்டு கிறார்கள். வெளிநாட்டுக்காரர்களை வெளியேற்றிவிட்டால் உள்நாட்டில் உள்ளவர்களுக்கு வேலை கிடைக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதிடொனால்டு டிரம்ப் போல் சொல்லிக்கொண்டி ருக்கிறார்கள்.  நம்முடைய நாட்டில் கூட மோடி அரசு அதே போன்ற பிரச்சாரத்தைச் செய்துகொண்டிருக்கிறது.இதன் மூலமாகச் சிறு சிறு வெற்றியையும் அவர்கள் பெறுகிறார்கள். இதை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களும் அதிகரித்து வருகின்றன. இதைப்பற்றி எங்களுடைய மாநாட்டு அறிக்கையில் விளக்கி இருக்கிறோம். பொதுச் செயலாளர் தனது உரையில் கடந்த 3 ஆண்டுகளில் சிஐடியு நடத்தியிருக்கிற போராட்டங்கள். அதன் அனுபவங்கள் பற்றி கூறியிருக்கிறார்.

ஜம்மு-காஷ்மீர்
ஜம்மு-காஷ்மீர் மாநில பிரதிநிதிகளும் இங்கு வந்துள்ளார்கள்.இன்டர் நெட் இணைப்பை நாங்கள் இப்போது கொடுத்து விட்டோம் என்றுஅரசு சொல்கிறது. ஆனால் இப்போதும் பெரும்பாலான மக்கள் இன்டர்நெட்டை பயன்படுத்த முடியவில்லை என்பதுதான் உண்மை. அடக்குமுறையும் முழுமையாக தீரவில்லை என்று பிரதிநிதிகள் தெரிவிக்கிறார்கள். இதுபோன்ற எல்லா அடக்குமுறைகளை எதிர்த்தும்  தொழிலாளி வர்க்கம் போராட்டத்தை முன்னெடுக்கும். இவ்வாறு ஹேமலதா கூறினார்பேட்டியின் போது  சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், அகில இந்திய செயற்குழு உறுப்பினர் ஆர்.கருமலையான், மாநில துணைப் பொதுச் செயலாளர் க.திருச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

சிஐடியு மாநாட்டில் நாளை அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க உறுதி மொழி ஏற்பு
சிஐடியு 16 வது அகில இந்திய மாநாடு சென்னையில் நடைபெற்று வருகின்றது. மாநாட்டின் ஒரு பகுதியாக ஜனவரி 26 குடியரசு தினத்தன்று (ஞாயிறு) காலை 8 மணிக்கு தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சியும், அரசியல் சட்டத்தை பதுகாக்க உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. தேசியக் கொடியை அகில இந்தியத் தலைவர் டாக்டர் கே.ஹேமலதா ஏற்றிவைக்க உள்ளார். ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோசலிசம் உள்ளிட்ட அரசியல்  சட்ட  முகவுரையில் குறிப்பிட்டுள்ள மாண்புகளைப் பாதுகாப்போம் என்ற உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சியும், மனிதச் சங்கிலியும் நடைபெற உள்ளது. மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட ஜனவரி 30அன்று நாடு முழுவதும்  வகுப்புவாத அரசியலை முறியடிப்போம்; ஜனநாயகத்தை, மத்ச்சார்பின்மையை பாதுகாப்போம் என பிரச்சாரம் ஆர்ப்பாட்டம், மனிதச் சங்கிலி, உறுதி மொழி ஏற்பு என பல வடிவங்களில் தொழிற்சாலைகளிலும் தொழிலாளர்  குடியிருப்பு பகுதிகளிலும் தொழிலாளர்கள் ஈடுபட உள்ளனர். 

;