tamilnadu

img

பாசிசம், நாசிசம், இந்துத்துவம் - ஒன்றே

பாசிசம் வளர்ந்து நமது வாசல் அருகே நெருங்கியுள்ள சூழலில் இந்நூல் வெளிவந்துள்ளது. இதனால் தான் பாசிசம் என்பது உலகம் முழுவதும் ஒரே பெயரில் இயங்காது, ஜெர்மனியில் நாசிசம் என்றால், இத்தாலியில் பாசிசம், அதுவே இந்தியாவில் இந்துத்துவாவாக வளர்ந்துள்ளது என்கிறார் நுலாசிரியர். 17 வது நாடாளுமன்ற தேர்தலில் எக்காலத்திலும் இல்லாத வகையில் பத்திரிக்கையாளர்கள், அறிவியலாளர்கள், கல்வியாளர்கள், நாடக கலைஞர்கள், திரைத்துறையினர், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள், வீரர்கள் என்று மோடி அரசுக்கு எதிராக வேண்டுகோள்களை விடுத்துள்ளனர்.இட்லர் ஜெர்மனியார்களே மேன்மையான வர்கள் இதர பகுதியினர் கீழானவர்கள் என்றான். இந்தியாவில் இந்துக்களே மேன்மையானவர்கள் இதர பகுதியினர் கீழானவர்கள் என்கிறது இந்துத்துவா. இந்துத்துவா என்பது வேறு. இந்து மதம் என்பது வேறு இந்தியாவில் வளர்ந்து வரும் பாசிசம் இந்து என்கிற முகமூடியை அணிந்து கொண்டு வளர்ந்து வருகிறது. மதவேடதாரிகளுக்கு எதிரான போராட்டம் ஆதிகாலம் தொட்டே இந்திய சமூகத்தில் நிகழ்ந்து வந்துள்ளது, வருகிறது. மதசீர்திருத்தவாதிகளும், நாத்திகர்களும், மார்க்சிஸ்டுகளும் கருத்தால் அனுகுமுறையால் வேறுப்பட்டு நின்றாலும், மூடநம்பிக்கை மற்றும் சடங்கு சம்பிரதாயம் போன்றவற்றை எதிர்த்து வினையாற்றுவதில் ஒன்றிணைந்து நிற்கிறார்கள்.


மதச்சார்பின்மை என்றால் கடவுள் மறுப்பாளர்கள் என்கிற கருத்து பொதுக் கருத்தாக திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது, மதச்சார்பின்மை என்பது மத நம்பிக்கை உள்ளோர்களையும்  தன்னகத்தே கொண்டது.பிரம்ம சாமஜம், ஆரிய சமாஜம் ஆகிய அமைப்புகளும் விவேகானந்தர், ராமனுஜர் போன்றோரும் மதவேடதாரிகளுக்கு எதிராக மேற்கொண்ட மத சீர்த்திருத்த நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தைக் கூறி, அதே நேரத்தில் அவர்கள் தீர்வை இந்து மதத்திற்குள்ளேயே தேடியதையும் விமர்சனப்பூர்வமாக முன் வைக்கிறது இந்நூல்.யோகாவும், பகவத்கீதையும் இந்தியாவின் அடையாளம் என ஆர்எஸ்எஸ் - பாஜக முன்னிறுத்துகிறது, உடலில் உருவாகும் நோய்களை குணப்படுத்த கூடிய சக்தி யோகாவிற்கு உள்ளது என்கிற அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களை பரப்பி மக்களை நம்ப வைக்கிறது. விவேகனந்தரின் சீடர் ஒருவர் யோகாவிற்கு பதில் மருத்துவமனைக்கு விவேகானந்தர் சென்றிருந்தால் இன்னும் பல காலம் வாழ்ந்திருக்க முடியும் என்கிறார். யோகா வெறும் உடற்பயிற்சி மட்டும் தான் நோய்களை குணப்படுத்துகிற ஆற்றல் அதற்கில்லை. இவைகளை தெரிந்த காரணத்தினால் தான் சிறிது நாட்களுக்கு முன் பாபா ராம்தேவ் அவர்களுக்கு நோய் ஏற்பட்டவுடன் யோகா செய்யாமல் மருத்துவமனைக்கு சென்றார்!  எவ்வாறெல்லாம் யோகாவிற்கு இந்து மதச்சாயம் பூசிட ஆர்எஸ்எஸ் - பாஜக முயற்சிக்கிறது என்பதை அலசுகிறது இந்நூல்.இனவாதமும், மதவாதமும் மேலோங்கி வரும் சூழலில் இனவாதம் குறித்து பல ஆதாரங்கள், தரவுகள் கொண்டு அலசி வாசிப்போர் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கருத்துக்களை முன் வைக்கிறது நூல்.


மானுட இன ஆய்வு அறிவியல் பூர்வமாக பயன்படுத்துவதற்கு மாறாக அரசியல் அதிகாரம் பெறவும், சுரண்டலை நியாயப்படுத்தவும் எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்று விளக்குவதோடு மட்டுமல்ல.இந்தியாவில் வளர்ந்துள்ள மதவாதத்தைப் பயன்படுத்தி அமெரிக்க ஏகாதிபத்தியம் எவ்வாறெல்லாம் தனது சுரண்டலை நிகழ்த்த மக்களிடையே  பிரிவினையை உருவாக்குகிறது, அதற்காக தன்னுடைய விண்வெளி மையத்தை எவ்வாறெல்லாம் பயன்படுத்துகிறது என்பதெல்லாம் புதிய தகவலாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெர்மனியில் நாசிசம் வளரும் போது அங்கிருந்த சோஷல் டெமாக்ரட்டுகள் எவ்வாறு ஊசலாட்டத்துடன் இருந்தார்களோ அது போலவே இந்தியாவில் காங்கிரஸ் இருந்து வருகிறது என்ற மிதவாத மதவாதம் கொண்ட காங்கிரசை விமர்சிக்கிறது.முதலாளித்துவத்தின் சுரண்டல், பேராசை இவைகளின் வடிவம் தான் பாசிசம். ஜெர்மனியில் நாஜி கட்சிக்கு அங்கிருந்த முதலாளிகள் பெரும் உதவி புரிந்து வந்ததை பற்றியும், இந்தியாவில் வளர்ந்து வரும் பாசிச ஆர்எஸ்எஸ் பாஜகவுக்கு பிர்லா துவங்கி இன்று உள்ள அதானி அம்பானி வரையிலான இந்திய முதலாளிகள் உதவி புரிந்து வருகிறார்கள் என்பதை பற்றியும் விளக்குகிறது.பாசிசத்தின் வளர்ச்சியை எதிர்க்க, தடுக்க இந்திய அறிவுலகம் இந்துத்துவ கற்பனையை எதிர் கொள்ள தேவையான தகவல்களை திரட்டி வழங்கியிருக்கிறது, அவைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதின் மூலமும், தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தங்கள், கூலி உயர்வுக்கு எதிரான போராட்டங்கள் என இவைகளை கடந்து விரிவான, ஆழமான வர்க்க போராட்டத்தை கட்டி எழுப்புவதின் மூலம் மட்டுமே இந்தியாவில் வளர்ந்து வரும் இந்துத்துவா என்கிற பாசிசத்தை தடுக்க முடியும்.இந்நூல் இந்தியாவில் வளர்ந்து வரும் இந்துத்துவ பாசிசத்தின் வேர் முதல் இன்றைய நிலை வரை அறிந்து கொள்வதற்கும், எதிர்வரும் காலங்களில் எதிர்வினையாற்றுவதற்கும் ஒரு சிறந்த நூலாகும்.

;