சென்னை, மே 18- எக்ஸ்பிரஸ் ரயில்களில் தூங்கும் வசதி கொண்ட மற்றும் பொது வகுப்பு பெட்டிளை அதிகரிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை திருவனந்தபுரம் மெயில் ‘எஸ்’ பெட்டியில் பயணம் செய்தவர்கள் பெரும் சிக்கலை எதிர்கொண்டனர். \
ஏராளமானோர் கழிப்பறை அருகே நின்று பயணம் செய்தனர். அவர்களில் பலரிடம் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள் மற்றும் காத்திருப்புப் பட்டியல் டிக்கெட்டுகளே இருந்தன. வார இறுதி நாட்களில் சென்னை சென்ட்ர லில் இருந்து புறப்படும் பெரும்பாலான ரயில்களில் இப்படி நடப்பது வழக்கமாக உள்ளது. தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் மற்றும் ஆந்திரா, மேற்கு வங்கத்திற்கு செல்லும் பயணிகள் இப்படி அடிக்கடி பாதிப்புக்குள்ளாகின்றனர்.
தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளும், பொது வகுப்புப் பெட்டிகளும் குறைவாக இருப்பதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பயணிகள் மத்தியில் மோதல் உருவாகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பை பெங்களூரு சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல் திருச்சூரில் எர்ணாகுளம் - பாட்னா விரைவு ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் இருந்த ஒரு பயணி இறந்தார்.
எனவே கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும். காத்திருப்போருக்கு இடம் வழங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தட்சிண ரயில்வே பென்ஷனர்ஸ் யூனியன் தலைவர் ஆர்.இளங்கோவன் கூறுகையில், டிக்கெட் இல்லாத பயணிகளை அகற்ற டிக்கெட் பரிசோதகர்களால் மட்டும் முடியாது. எனவே ரயில்வே காவலர்கள் உதவிக்கு இருக்க வேண்டும். எல்லா இடங்களிலும் அவர்கள் பாதுகாப்புக்கு இருப்பதில்லை. ஏனெனில் ரயில்வே பாதுகாப்பு படையில் நிறைய காலியிடங்கள் உள்ளன. மேலும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒவ்வொரு வகுப்பிற்கும் கூடுதலான தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளை இணைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.