tamilnadu

img

மருத்துவர். ராமதாஸ் அறிக்கை சமூக பதற்றத்தை உருவாக்கி வன்முறையை தூண்டும் நோக்கம் கொண்டது - சிபிஎம் கண்டனம்

பொன்பரப்பி விவகாரம் குறித்த பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை சமூக பதற்றத்தை உருவாக்கி வன்முறையை தூண்டும் நோக்கம் கொண்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

பொன்பரப்பியில் தேர்தல் நாளன்று பாமகவினர் தலித் மக்கள் மீது தாக்குதல் தொடுத்து வீடுகளை அடித்து, நொறுக்கி வாக்களிக்க விடாமல் அடித்து விரட்டி வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைக் கண்டித்து 24-4-2019 அன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன் மற்றும் இதர கட்சித்தலைவர்கள் வன்னிய சமூக மக்களுக்கு எதிரான வன்மத்தை கொட்டியுள்ளதாக டாக்டர் ராமதாஸ்

அறிக்கை விடுத்துள்ளதுடன், அவ்வறிக்கையை துண்டு பிரசுரமாக விநியோகித்து வருகிறார்கள். இது சமூக பதற்றத்தை உருவாக்கும்; கிராமப்புறங்களில் அமைதியை சீர்குலைக்க சாதிய அணிதிரட்டலுக்கு வித்திடும் ஆபத்தான முயற்சியாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். மேலும் பொன்பரப்பியில் நடந்துள்ள ஜனநாயகப் படுகொலை குறித்தோ, தலித்

மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல் குறித்தோ டாக்டர் Dr. Ramadossராமதாஸ் அவர்கள் ஒரு வார்த்தை கூட தனது அறிக்கையில் கண்டனத்தை தெரிவிக்கவில்லை என்பதிலிருந்தே அவரது உள்நோக்கத்தை புரிந்து கொள்ள முடியும். தோழர் முத்தரசனும், மற்றவர்களும் பேசாத விசயங்களை பேசியதாக முற்றிலும் உண்மைக்கு மாறாக டாக்டர் ராமதாஸ் அறிக்கை

விடுத்துள்ளது கண்டனத்திற்குரியதாகும். மேலும் அடையாளம் தெரியாதவர்கள் மூலம் அவருக்கு தொலைபேசியில் ஆபாசமாக பேசி வருவது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயலாகும். நடைபெற்ற அந்த ஆர்ப்பாட்டத்தில் தலித் மக்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், அதில் ஈடுபட்ட பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், வாக்குரிமை மறுக்கப்பட்ட தலித் மக்களுக்கு மறுவாக்குப்பதிவு அளிக்க வேண்டுமெனவும் வற்புறுத்தி குரலெழுப்பப்பட்டது. இதன் உண்மைத்தன்மையையும், நியாயத்தையும் திசை திருப்பும் வகையில் ஒரு சமூக மக்களுக்கு எதிராக பேசப்பட்டதாக அறிக்கை விடுப்பதும், அதனை துண்டு பிரசுரமாக்கி விநியோகிப்பதும், அரசியல் ஆதாயம் கருதி சுயநல நோக்கோடு சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் செயலாகும். நடைபெற்றுள்ள தேர்தலில் சந்தர்ப்பவாத நிலை எடுத்து பாமக, அதிமுக, பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததன் விளைவாக அக்கட்சி அணிகள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டு போட்டியிடும் தொகுதிகளில் பாமக படுதோல்வி அடைய உள்ள நிலையில், அதை மூடி மறைப்பதற்காக இத்தகைய திசை திருப்பும் வேலையை டாக்டர் ராமதாஸ் ஈடுபட்டுள்ளார் என்பது தெளிவாகிறது.

தேர்தலில் வெற்றி தோல்விகள் சகஜம் என்பதையும், அதனால் ஏற்படும் பலாபலன்களை சரி செய்து கொள்வதற்கு சம்பந்தப்பட்ட கட்சிகள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டுமே தவிர, எதிர்க்கட்சிகள் மீது புழுதிவாரி தூற்றுவதும், சாதிய அணிதிரட்டலை பலப்படுத்தி சமூக பதற்றத்தை உருவாக்குவதும் மிகவும் ஆபத்தானது என்பதை சுட்டிக்காட்ட

விரும்புகிறோம். எனவே, இத்தகையப் போக்கினைக் கைவிட்டு பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் இணக்கமான நல்வாழ்விற்கு உறுதுணையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இம்மக்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கு அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டிய முயற்சிகளுக்கு டாக்டர் ராமதாஸ் அவர்களும், பாட்டாளி மக்கள் கட்சியும் முன்வர வேண்டுமென்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்ள விரும்புகிறோம்.

அரசியல் ஆதாயம் கருதி சாதிய வன்மத்தை தூண்டும் இவரது முயற்சியை நிராகரிக்க வேண்டுமென அனைத்துப் பகுதி மக்களையும் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

;