வெள்ளி, பிப்ரவரி 26, 2021

tamilnadu

img

மருத்துவர் சாந்தா மறைவு... சிபிஎம் இரங்கல்....

சென்னை:
புகழ்பெற்ற மருத்துவர் சாந்தா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

உலகப் புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவருமான டாக்டர் சாந்தா அவர்களின் மறைவு வேதனையளிக்கிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். 

மருத்துவர் சாந்தா தனது மருத்துவப் படிப்பை முடித்தவுடன் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களால் துவங்கப்பட்ட அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சேர்ந்து மருத்துவத் துறையில் தன்னலமற்ற சேவை ஆற்றியவர். புற்று நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் உலக சாதனை படைத்தவர். ஏழை, எளிய மக்களுக்கு புற்றுநோய்சிகிச்சை எளிதில் கிடைக்க அரும்பணியாற்றி யவர். புற்றுநோயை கட்டுப்படுத்துவதே தனது வாழ்வின் லட்சியமாக கருதி தனது இறுதி மூச்சுவரை செயல்பட்டவர். 

கடந்த 66 ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய அவருக்கு மத்திய, மாநில அரசுகளின் உயரிய விருதுகளான மகசேசே விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டவர். அவரது மறைவு உலகெங்கும் இருக்கும் புற்றுநோய் நோயாளிகளுக்கும், ஏழை, எளிய மக்களுக்கும், மருத்துவ உலகிற்கும், தமிழக மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். மறைந்த டாக்டர் சாந்தா அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் அஞ்சலியைச் செலுத்துகிறோம்.டாக்டர் சாந்தா அவர்களை இழந்து வாடும் அடையாறு மருத்துவமனையின் சக மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மறைந்த புற்றுநோய் மருத்துவ நிபுணர் டாக்டர் சாந்தா அவர்களின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் அ. பாக்கியம், மாநிலக்குழு உறுப்பினர் ஐ. ஆறுமுக நயினார், மருத்துவர் ரெக்ஸ் சற்குணம் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

;