tamilnadu

img

திண்டுக்கல் தோழர் அறம் எழுத்தாளர் பா.ஜெயப்பிரகாசம் ஆகியோர் மறைவு - சிபிஐஎம் இரங்கல்

திண்டுக்கல் தோழர் அறம் மற்றும் எழுத்தாளர் பா.ஜெயப்பிரகாசம் ஆகியோர் மறைவுக்கு மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:

தோழர் அறம்

தோழர் அறம் அவர்கள் திங்களன்று காலை திண்டுக்கல்லில் காலமானார். அவருக்கு வயது 91. தோழர் அறம், விடுதலைப் போராட்ட வீரர். இளம் வயதிலேயே பொதுவுடமை இயக்கத்துடன் தன்னை பிணைத்துக் கொண்டவர். ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தபோதே, கட்சிப்பணி ஆற்றியவர். இதனால் பழிவாங்கும் நடவடிக்கையாக பல ஊர்களுக்கு மாற்றப்பட்டவர். தலைமறைவு காலத்தில் கட்சி தலைவர்களை பாதுகாத்தவர். தோழர் ஏ.நல்லசிவன், வே.மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட தலைவர்களின் நெருங்கிய சகா தோழர் அறம்.

ஏராளமான இளைஞர்களை இடதுசாரி இயக்கத்துக்குள் ஈர்த்தவர். பணி ஓய்வுக்கு பிறகு தீக்கதிர் நாளேட்டிற்கு ஏராளமான கட்டுரைகளை மொழிபெயர்த்து தந்தவர். தன்னுடைய இறுதி நாட்கள் வரை உறுதியான மார்க்சிஸ்டாக திகழ்ந்த தோழர் அறம் மறைவு கட்சிக்கு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு கட்சியின் சார்பில் ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

எழுத்தாளர் பா.ஜெயப்பிரகாசம்

இடதுசாரி எழுத்தாளர் தோழர் பா.ஜெயப்பிரகாசம் அவர்கள், மாணவப் பருவத்திலேயே இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர். கரிசல் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர்.

பா.ஜெயப்பிரகாசம் என்ற பெயரிலும், சூரியதீபன் என்ற புனைபெயரிலும் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரைகள் என எழுதிக்குவித்தவர். சிறுகதை துறையில் காத்திரமான பங்களிப்பைச் செய்தவர். மொழி உரிமைக்காகவும், மாநில உரிமைகளுக்காகவும் இடையறாது களமாடி வந்தவர். தன்னுடைய இறுதிக்காலத்தில் தமுஎகசவோடும், செம்மலர் ஏட்டோடும் தம்மை நெருக்கமாக பிணைத்துக் கொண்டவர். அரசு உயர் பொறுப்பில் இருந்தபோதும் பாட்டாளி மக்களுக்காகவே பாடுபட்டவர்.

அவரது மறைவு இடதுசாரி இலக்கியத்திற்கும், இயக்கத்திற்கும் பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு கட்சியின் சார்பில் ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.