மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிப்பதை ஏற்க மாட்டோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
நொச்சிக்குப்பம் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை மேற்கு பகுதியில் உள்ள மீன் கடைகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து மாநகராட்சி அந்த கடைகளை அகற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏப்.12 முதல் மீனவர்கள் கடலுக்குள் செல்லாமலும், சாலைகளில் கட்டுமரங்களை நிறுத்தியும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மீன்பிடி மண்டலம்
இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை செவ்வாயன்று (ஏப்.18) ஜி.ராமகிருஷ்ணன் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர் பேசுகையில், 4 மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தி.நகர் ரங்கநாதன் தெருவை வியாபார மண்டலமாக மாற்றியுள்ளது. அதேபோன்று, நொச்சிக்குப்பம் - பட்டினம்பாக்கம் வரையிலான பகுதியை பாதுகாக்கப்பட்ட மீன்பிடி மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றார்.
கடற்கரையை மீனவர்கள் தவிர வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைபாடு. மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் எந்த நடவடிக்கையையும் ஏற்க மாட்டோம்.
கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை மண்டலம் என்ற பெயரில் சென்னை முதல் குமரி வரை உள்ள மீனவர்களையும், குப்பங்களையும் அகற்ற முயற்சிக்கின்றனர். ஓட்டல்கள் கட்டி பணம் சம்பாதிக்க ஏழைகளின் வாழ்வாரத்தை அழிப்பதை ஏற்க முடியாது. ஏப்.12ந் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும்.
வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடைபெறும் மீனவர்களின் போராட்டம் தொடரும். அதற்கு மார்க்சிஸ்ட் கட்சி துணைநிற்கும். லூப் சாலை என்பதை சிந்தனை சிற்பி ம.சிங்காரவேலர் சாலை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.