tamilnadu

img

தேர்தல் ஆணையத்தின் ஜனநாயக படுகொலை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,“ தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைத் தேர்தல்களை நடத்தும் பொறுப்பை பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுக அரசிடமே முழுமையாக ஒப்படைத்து விட்டு இந்திய தேர்தல் ஆணையம் ஒதுங்கிக் கொண்டு விட்டதோ என்ற பலத்த சந்தேகம் தேர்தலை சந்திக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ளது” என்று கூறியிருக்கிறார். 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை அறிவிக்காதது முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் அமைந்து விட்டது. அதிமுக ஆட்சிக்கு எவ்வித ஆபத்தும் நேர்ந்து விடக் கூடாது என்பதற்காகவே இந்த தேர்தலை தள்ளி வைத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை மிகுந்த வேதனையளிக்கிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். எதிர்க் கட்சிகள் மீது மட்டும் வழக்குகள் பதியப்படுகிறது. ஆளுங்கட்சியினரின் அத்தனை விதிமுறை மீறல்களையும் தலைமை தேர்தல் அதிகாரி தாராளமாக அனுமதித்துக் கொண்டிருக்கிறார்.


“திருப்பரங் குன்றம் தேர்தலில் ஜெயலலிதாவின் கைரேகையை போலி” என்றும், “அதை ஏற்று அதிமுகவின் ஊது குழலாக தலைமை தேர்தல் அதிகாரி செயல்பட்டார்” என்றும் உயர் நீதிமன்றமே கண்டனம் செய்த பிறகும் அந்த தேர்தல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப் பதற்கும், வழக்குப் போடுவதற்கும் இது வரை தேர்தல் ஆணையம் எந்த உத்தரவும் பிறப்பிக்காததையும் சுட்டிக்காட்டியுள்ளார். சின்னங்கள் ஒதுக்குவதிலும் தேர்தல் ஆணையம் பாரபட்சமாகவும், ஒருதலைபட்சமாகவும் செயல்படுகிறது. பாஜக- அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அங்கீகாரத்தை இழந்திருந்தாலும் அவர்கள் கேட்பதற்கு முன்னமே பழைய சின்னமே ஒதுக்கப் படுகிறது. மத்திய பாஜக அரசின் கட்டளைக்கு தேர்தல் ஆணையம் அடிபணிந்து கிடப்பது மன்னிக்க முடியாத மாபெரும் ஜனநாயகப் படுகொலை என்றும் தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி அரசியல் சட்டக் கடமையை அச்சமின்றி நிறைவேற்றிட முன்வர வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.