சென்னை:
தமிழகத்தில் ஜனவரி மாதம் 31 ஆம் தேதி வரைக்கும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் 31.12.2020 வரை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.
பல்வேறு ஆய்வுக் கூட்டங்கள், மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்த கருத்துகள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடந்த ஆலோசனைகளின் அடிப்படையிலும் மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.
தற்போதுள்ள நோய் பரவல் நிலை மற்றும் வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 31.1.2021 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.
தொடரும் தடைகள்...
புதிய உருமாறிய நோய்க் கிருமி பரவாமல் தடுக்க, வெளி மாநிலங்களிலிருந்து (புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களைத் தவிர) தமிழ் நாட்டிற்குள் வருபவர்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள இ-பதிவு முறை தொடரும்.
மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை தொடரும்.தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.
காணும் பொங்கல்
காணும் பொங்கல் அன்று கடற்கரைகளில் அளவுக்கு அதிகமான பொதுமக்கள் கூட்டம் கூடுவதால் கொரோனா தொற்று ஏற்படுவதை முன்னெச்சரிக்கையாக தடுக்கும் வகையில், மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் காணும் பொங்கல் அன்று மட்டும் (16.1.2021) பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
முகக் கவசம் கட்டாயம்..
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வரும் சூழல் நீடிக்கவும், அதனை முழுமையாக தடுக்கவும், நாம் அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும். குறிப்பாக, மக்கள் பொது இடங்களில் அதிகமாக கூடுவதை தவிர்த்து, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். பொதுமக்கள் வெளியே செல்லும்போதும், பொது இடங்களிலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவவேண்டும். தனிமனித இடைவெளியை தவறாமல் கடைபிடிக்கவேண்டும். அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த நோய்த் தொற்றுப் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும். எனவே, அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.