tamilnadu

img

மத்திய அரசு சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்ப பெற சிபிஎம் வலியுறுத்தல்

மத்திய அரசு சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து
கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறப்பட்டுள்ளதாவது

கோவிட் -19 தொற்று மிகக் கொடூரமாக பாதித்து வந்துள்ள இக்கால கட்டத்தில்,
பெருவாரியான மக்கள் தங்களின் வாங்கும் சக்தியை, வாழ்வாதாரத்தை இழந்து
நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு மோசமான
நிலைமைகள் நீடித்து வரும் நிலையில் கடந்த 20 நாட்களில் சமையல்
எரிவாயுவின் (கேஸ்) விலை ரூ. 100/- உயர்த்தியிருப்பது அடுப்பை பற்ற
வைக்காமலே எரிகிற சூழல் (கோபம்) உருவாகியுள்ளது.
சமையல் எரிவாயு உருளையின் விலையை முன்னறிவிப்பின்றி
உயர்த்தியிருப்பதும், வங்கி மூலம் வழங்கப்படும் மானியத் தொகை
முழுமையாக வழங்கப்படாததும், அடித்தட்டு மக்களுக்கும், நடுத்தர
வகுப்பினருக்கும் ஏற்படுத்தியுள்ள மனஉளைச்சலை அதிகார வர்க்கம் உணர்ந்து
செயல்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.
கடந்த நவம்பர் 20-ந் தேதி முதல் பெட்ரோல் - டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து
வருகிறது. 2018 செப்டம்பர், அக்டோபர் மாதங்களுக்கு இணையாகவும், 2018
செப்டம்பரில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 78.89 டாலராக
இருந்தது. தற்போது கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 50 டாலருக்கும் கீழே
உள்ள நிலையில் விலை உயர்வை எப்படி நியாயப்படுத்த முடியும்.

கலால் வரியை குறைப்பதற்கு மாறாக, கொரோனா காலத்தில் கூட இரண்டு
முறை கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி மக்களிடமிருந்து
கொள்ளையடிப்பது ஏற்க இயலாது.
சர்வதேச சந்தையில் விலைகுறைந்தால், இங்கேயும் விலை குறையும் என
வசீகரமாக பேசியவர்கள் சர்வதேச சந்தையில் விலை குறையும் போது, இங்கு
ஏன் விலையை உயர்த்த வேண்டும்?.
வேலைவாய்ப்பு சுருங்கியும் - இல்லாத சூழலும் - அத்தியாவசிய பொருட்களின்
விலை உயர்வும் ஏற்பட்டுள்ள இச்சூழலில் மக்களை மேலும், மேலும் கடும்
சிரமத்திற்கு உள்ளாக்கும் அநியாய கேஸ் விலை உயர்வை கண்டிப்பதோடு,
உடனடியாக விலை உயர்வை திரும்ப பெற உரிய தலையீடு செய்ய
வேண்டுமென மத்திய - மாநில அரசுகளை சிபிஐ (எம்) மாநிலக்குழு
வலியுறுத்துகிறது.

;