இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் தாயார் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிபிம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் தாயார் கரீமா பேகம் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இளம் வயதிலேயே தந்தையை இழந்த ஏ.ஆர். ரகுமானுக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுத்து இசைத்துறையில் அவர் உலக அளவில் சாதனை படைப்பதற்கு உறுதுணையாக இருந்தவர் அவரது தாய் கரீமா பேகம் ஆவார். ஏ.ஆர். ரகுமான் இரண்டு ஆஸ்கார் விருதுகள் பெற்ற போது அவ்விருதுகளை தன்னுடைய தாய்க்கு சமர்ப்பிப்பதாக கூறியது தனது தாயின் மீது அவருக்கு இருந்த அளப்பரிய அன்பையும், மரியாதையையும் எடுத்துக்காட்டியது.
தாயாரை இழந்து வாடும் ஏ.ஆர். ரகுமானுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். இத்துயரிலிருந்து மீண்டு அவர் தனது இசைப்பயணத்தை தொடர வேண்டும்.