வியாழன், பிப்ரவரி 25, 2021

tamilnadu

img

காவல்துறை அதிகாரிகள் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க மாதர் சங்கம் வலியுறுத்தல்... குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் தடியடிக்கு கண்டனம்

சென்னை:
சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய தடியடிக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்  கண்டனம் தெரிவித்துள்ளது. காவல்துறை அதிகாரிகள் மீது முதல்வர்  நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர்  எஸ். வாலண்டினா, மாநிலப் பொதுச் செயலாளர் பி. சுகந்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

குடியுரிமை சட்ட திருத்தத்தைஎதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டையில் பெண்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வந்தனர். அதுவும் ஒருகுறிப்பிட்ட இடத்திற்குள், பொது மக்களுக்கோ, பாதசாரிகளுக்கோ, போக்குவரத்திற்கோ எந்தவித இடையூறும் இல்லாத வகையில் அந்தஇயக்கம் என்பது நடந்து கொண்டிருந்தது. மேலும் இந்த இயக்கம் என்பது,நடைபெறுகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி சட்டங்களை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என்ற தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி நடத்தப்பட்ட இயக்கமாகும்.   தங்கள் ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்துவதற்கும், அரசியலமைப்புக்கு எதிரான சிஏஏ,என்பிஆர்,என்ஆர்சி சட்டங்களுக்கு எதிராக அமைதியாக எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் கூடினர். அந்தப் போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கூடியிருந்தனர்.அவர்களுக்கு பாதுகாப்பாக பலஇளைஞர்களும் கூடியிருந்தனர். ஆனால் திடீரென்று காவல்துறையினர் அங்கிருந்து விலகும்படி கூறியிருக்கிறது. மேலும் பெண்களுக்கு பாதுகாப்பாக இருந்த அந்த இளைஞர்களையும், அங்கு கூடியிருந்த பெண்களையும் அடித்து விரட்டி உள்ளது. கடுமையாக லத்தியால் தாக்கியுள்ளது. பல இளைஞர்களும், பெண்களும் படுகாயம் அடைந்துள்ளனர். 

காவல்துறையின் அராஜகம் என்பது இந்த சம்பவத்தில் மட்டுமல்ல, இதே போன்று போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையே துப்பாக்கிச்சூடு நடத்தியதில் உத்தரப்பிரதேசத்தில் 21 பேரும், அசாமில் 3 பேரும்,கர்நாடகாவில் 2 பேரும் பலியாகியுள்ளனர். இது போன்ற காவல்துறையின் தாக்குதல்களை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஆர்எஸ்எஸ் வெறியர்கள்  தில்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்திலும், அமைதி வழியில்போராடும் ஷாகின் பாக் பகுதியில்பெண்கள் மீதும் துப்பாக்கிச் சூடுநடத்தியுள்ளனர். பாஜக அமைச்சர்களே இதனை நியாயப்படுத்தியும் பேசியுள்ளனர்.தமிழகத்திலும் கடந்த காலத்தில் சிஏஏ எதிர்ப்பு கோலம் வரைந்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சிஏஏற்கு எதிராக போராடிய சென்னை பல்கலைக் கழக மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காதலர் தினக் கொண்டாட்டத்திற்காக அம்பேத்கர் மணி மண்டபத்திற்கு சென்ற சமூக செயல்பாட்டாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். காவல்துறையின் அராஜகப் போக்கு என்பது இந்தகாலகட்டத்தில் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. தமிழக காவல்துறையின் இத்தகைய போக்கை ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. சிஏஏவிற்கு எதிரான போராட்டமானாலும் மத்திய -மாநிலஅரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிரான போராட்டமானாலும் எந்தவிதப் போராட்டத்திற்கும் அரசு அனுமதிப்பதில்லை. ஒரு ஜனநாயக நாட்டில் ஜனநாயக வழியில் போராட அனுமதியில்லை.இது போன்ற மனிதாபிமானமற்ற தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது தமிழக முதல்வர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் 13 மாநிலமுதலமைச்சர்களால் சிஏஏ, என்பிஆர்,என்ஆர்சி சட்டங்கள் அமல்படுத்தப்படாது என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் தமிழ்நாட்டிலும்  சிஏஏ,என்பிஆர்,என்ஆர்சி சட்டங்கள் அமல்படுத்தப்படாது என்று தமிழ்நாடு மக்களுக்கு உறுதியளிக்கும் வகையில் சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;