tamilnadu

img

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்காக புதிய வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை தலைமைச் செயலகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையின் பயன்பாட்டிற்காக 63.30 கோடி ரூபாய் மதிப்பிலான ஊர்திகளைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

வான்நோக்கி உயரும் ஏணி கொண்ட 3 ஊர்திகள், 7 அதிஉயர் அழுத்த நீர்த்தாங்கி வண்டிகள், 20 வாட்டர் பவுசர் வாகனங்கள், 25 புதிய நீர்தாங்கி வண்டிகள், மாவட்ட அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 16 ஜீப்கள், பேரிடர் நேரங்களில் ஆட்கள் மற்றும் உபகரணங்களை ஏற்றிச் செல்லும் 2 ஊர்திகள் ஆகியவற்றைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையானது, “காக்கும் பணி எங்கள் பணி” என்பதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு மக்களுக்குச் சேவையாற்றும் துறையாகும்.

பேரழிவை ஏற்படுத்தும் தீயிலிருந்து உயிர்களையும், உடைமைகளையும் காப்பதோடு, இயற்கை இடர்பாடுகளான வெள்ளம், புயல், நிலச்சரிவுகள் போன்றவைகளிலிருந்தும், மனிதர்களால் ஏற்படுத்தப்படும் அழிவுகளிலிருந்தும் மக்களைக் காப்பதும், அவசர உதவி புரிவதும் இத்துறையின் முக்கிய பணியாகும்.

இத்துறையின் செயல்திறனை மேம்படுத்திட அரசு பல்வேறு நவீன கருவிகள் மற்றும் தீயணைப்பு ஊர்திகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில், பலமாடிக் கட்டிடங்களில் ஏற்படும் தீ விபத்துகளைச் சமாளிக்க 54 மீட்டர் உயரம் வரை வான்நோக்கி உயரும் ஏணி கொண்ட 3 ஊர்திகள்.

மலைப்பாங்கான இடங்களில் ஏற்படும் தீ விபத்துக்களைக் கையாள்வதற்கு நான்கு சக்கர இயக்கம் கொண்ட 7 அதிஉயர் அழுத்த நீர்தாங்கி வண்டிகள்.

தீ விபத்திடங்களில் ஏற்படும் தண்ணீர் தேவையினை உடனடியாக சமாளிக்க 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 20 வாட்டர் பவுசர் வாகனங்கள்.

பழுதடைந்த நீர்தாங்கி வண்டிகளுக்கு மாற்றாக 25 புதிய நீர்தாங்கி வண்டிகள். மாவட்ட அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 16 ஜீப்கள், பேரிடர் நேரங்களில் ஆட்கள் மற்றும் உபகரணங்களை ஏற்றிச் செல்லும் 2 ஊர்திகள் ஆகியவை 63.30 கோடி ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளர் ப. அமுதா, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் அபாஷ் குமார், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இணை இயக்குநர் என். பிரியா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.