செவ்வாய், ஜனவரி 26, 2021

tamilnadu

சென்னை செய்திகள்; 8 வழிச் சாலை,சென்னை சென்டிரல்,நடிகை சந்தியா

8 வழிச் சாலையை எதிர்த்து வழக்கு: நாளை தீர்ப்பு


சென்னை, ஏப்.6-சென்னை - சேலம் 8 வழிச் சாலை திட்டத் துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பு திங்களன்று (ஏப்.8) சென்னை உயர்நீதிமன்றம் வழங்குகிறது.சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டம் ரூ.10ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டது. இந்த திட்டத்துக்காக சேலம், தருமபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சுமார் 1,900 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதில் ஏராளமான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, அழிக்கப்படுவதை விவசாயிகள் கடுமையாக எதிர்த்தனர். தீவிர போராட் டத்திலும் ஈடுபட்டனர்.இந்த திட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், விவசாயிகள் வழக்கு தொடர்ந்தனர். பூவுலகின் நண்பர்கள் அமைப் பைச் சேர்ந்த சுந்தரராஜன் உள்பட பலர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கை நீதிபதிகள் டி.எஸ்,. சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்தனர். அதாவது இந்த வழக்கை கடந்த 8 மாதங்களாக நீதிபதிகள் விசாரித்தனர். பின்னர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து, கடந்த ஜனவரி 4- ஆம் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை திங்கட்கிழமை நீதிபதிகள் அறிவிக்கின்றனர்.


சென்னை சென்டிரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: அரசு ஆணை வெளியீடு


சென்னை, ஏப்.6-கடந்த மார்ச் மாதம் 6- ஆம் தேதி சென் னையை அடுத்த வண்டலூர் கிளாம்பாக்கத் தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந் திர மோடி ‘சென்னை சென்டிரல் ரயில் நிலையம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ரயில் நிலையம் என்று இனி அழைக்கப்படும்’ என்று அறிவித்தார். இந்த நிலையில் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்துக்கு ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்’ என்று பெயர் மாற்றி அரசு ஆணை வெளியிடப்பட்டிருக்கிறது.


நடிகை சந்தியாவின் உடல் பாகங்கள் பெற்றோரிடம் ஒப்படைப்பு


சென்னை, ஏப்.6-சென்னையில் துண்டு துண்டாக வெட்டப் பட்ட நடிகை சந்தியாவின் உடல் பாகங்கள் அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப் பட்டது. நாகர்கோவில் பூதப்பாண்டி ஞாலம் பகுதியைச் சேர்ந்த துணை நடிகை சந்தியா. கடந்த ஜனவரி மாதம் சென்னையில் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது தொடர்பாக பள்ளிக்கரணை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சந்தியாவின் கணவர் பாலகிருஷ்ணனே, அவரை கொலை செய்து உடல் பாகங்களை குப்பைத் தொட்டியில் வீசியது தெரிய வந்தது. சந்தியாவின் உடல் பாகங்களான இடுப்பு பகுதி, கை, கால்கள் கிடைத்த நிலையில் தலையை காவல்துறையினர் தேடி வந்தனர். ஆனால், 2 மாதங்களாகியும் சந்தியாவின் தலை மட்டும் கிடைக்கவில்லை.இந்த நிலையில், சந்தியாவின் உடல் பாகங்களை பெற்றோரிடம் ஒப்படைக்க காவல் துறையினர் முடிவு செய்தனர். இதையடுத்து அவரது பெற்றோர் ராமச்சந்திரன், தாய் பிரசன்னகுமாரி, சித்தி உஷா, அவரது மகள் விஜி ஆகியோர் சனிக்கிழமை(ஏப்.6) சென்னை வந்தனர். அவர்களிடம் சந்தியாவின் உடல் பாகங்கள் ஒப்படைக்கப்பட்டது.


;