சேலம் சென்னை 8 வழிச்சாலை குறித்தான தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்த உயர் நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
சேலம் – சென்னை இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 8 வழி பசுமை சாலை அமைக்க, தமிழக அரசும், மத்திய அரசும் முயற்சித்து வந்தன. சேலம், தருமபுரி, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில், சுமார் 8 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசாணை பிறப்பித்தது. குறிப்பாக 8 வழிச்சாலை அமையும் பகுதியில் உள்ள விவசாயிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வந்தனர். இது விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வந்தது. இதனை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் போராடி வந்தனர். குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு கூட அனுமதி வழங்காமல் அனைவரையும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு கைது செய்தது.
இத்திட்டத்தை எதிர்த்து நில உரிமையாளர்கள், விவசாயிகள், பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன், உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர். நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும், திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்த கோரியும், வனவிலங்குகள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மரங்களை வெட்டாமல் சாலை அமைக்க கோரியும், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், 8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்த, இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்குகள் 6 மாதங்களுக்கு மேலாக நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த டிசம்பர் மாதம், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது. இந்நிலையில் பரபரப்பான இந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் சேலம் - சென்னை 8 வழிச்சாலை அமைப்பதற்காக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது
விவசாயத்தை அளித்து எந்த வளர்ச்சியும் தேவையில்லை. சுற்றுச்சூழலை அளித்து எந்த வளர்ச்சியும் தேவையில்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் 8 வழிச்சாலை தீர்ப்பில் மேல்முறையீடு செய்யக் கூடாது என தமிழக அரசிடம் பாமக சார்பில் வலியுறுத்துவோம் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். ஆனால் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சியின் மீது தொடர்ந்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்த பாமக நாடாளுமன்ற தேர்தல் சட்ட மன்ற இடைத்தேர்தலையொட்டி அதிமுக தலைமையிலான கூட்டணியிலேயே இணைந்து. அப்போது எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு பதில் அளித்த பாமக தலைமை மக்கள் நலனுக்காக மட்டுமே அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளோம் என்றது. ஆனால் தற்போது மக்கள் நலனுக்கு எதிரான 8 வழிச்சாலை திட்டத்தில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து அதிமுக மேல்முறையீடு செய்வோம் என்று தெரிவித்துள்ளது. இதேபோல் அதிமுக பாமக கூட்டணி உறுதியானால் 7பேர் விடுதலை செய்வதற்கான அழுத்தத்தை தந்து தேர்தலுக்கு முன்பே 7பேர் விடுவிக்கப்படுவர் என பாமக தெரிவித்தது. ஆனால் மோடி பங்கேற்ற பிரச்சாரக்கூட்டத்தில் ராமதாஸ் கோரிக்கை மனு கொடுத்ததோடு 7 பேர் விடுதலை குறித்து மற்ற ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பு எதையும் எடுக்கவில்லை என்பதே எதார்த்தம்.
அதிமுக பாமக கூட்டணியின் இந்த முரண்பாடு மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்டாலின் கேள்வி
மக்களின் உணர்வுகளை மதிக்காத எடப்பாடி அரசுக்கு இது மரண அடி என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டோம் என தமிழக முதல்வர் எடப்பாடி அறிவிக்க வேண்டும். அவ்வாறு மேல்முறையீடு செய்யப்படும் பட்சத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து பாமக வெளியேற தயாரா என்ற கேள்வி எழுப்பி உள்ளார்.