விருதுநகர், மார்ச் 23- தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது பொது மக்களுக்கு உள்ள அதிருப்தி குறித்து உளவுத்துறை தொடர்ந்து கோட்டைக்கு தகவல் கொடுத்ததன் விளைவால் தான் அவரது ‘விருது நகர் மாவட்டச் செயலாளர்’ பதவி பறிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக-வின் விருதுநகர் மாவட்டச் செயலாளராக சுமார் எட்டு ஆண்டு காலம் பொறுப்பு வகித்து வந்தவர் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி. திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த இவர் அதிமுகவின் அடிமட்டத் தொண்டராக இருந்தார். பின்பு, திருத்தங்கல் பேரூராட்சித் துணைத் தலைவர், நகராட்சி துணைத் தலைவ ராக பொறுப்புகளை அலங்கரித்து வந்தார். 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சிவகாசி தொகுதி சட்மன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அதிமுகவின் மாவட்டச் செயலாளர், அமைச்சர் என இரட்டைப் பதவி களைப் பிடித்தார்.
2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார். இதையடுத்து, பால்வளத்துறை அமைச்சர் பதவி பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிலையில், இவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சமீபகாலமாக பாஜக வினரே வியக்கும் அளவிற்கு, அவர் களை விஞ்சும் அளவிற்கு இந்துத்துவா மதவாதத்திற்கு ஆதர வான பத்திரிகைகளுக்கு தொடர்ந்து பேட்டியளித்து வந்தார். குறிப்பாக, தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்திற்குள் புகுந்து மாணவர்களைத் தாக்கியவர்கள் அனைவரும் தேசியவாதிகள், பொதுநலவாதிகள் எனப் பேட்டியளித் தார். மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றவர் ஒரு மனிதர் தான்; அவர் மீது மதத்தை திணிக்கக் கூடாது என விதண்டாவாதம் பேசினார். தொடர்ந்து இந்துத்துவா கருத்துக்களையே ஓங்கி ஒலித்ததோடு அவற்றை மக்களிட மும் திணிக்க முயற்சித்தார். துணை முதல்வர் உள்ளிட்ட சில அமைச்சர் கள் நடிகர் ரஜினிகாந்தின் கருத்து தவறு எனக் கூறியபோது, கட்சித் தலைமை யின் கருத்தை காதுகொடுத்து கேட்கா மல் ரஜினிகாந்திற்கு ஆதரவாக பேசி னார்.
முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக் களை தொடர்ந்து வெளியிட்டு வந்து அவர்களின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டார். முஸ்லிம்கள் குறித்து அவ தூறு பேசிய அமைச்சர் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இஸ்லாமிய அமைப்புகள், அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தனர். இந்தநிலையில், சொந்தக் கட்சிக்குள் இவருக்கு எதிர்ப்பு வலுத் தது. சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட கூட்டத் தில் பெரும்பாலான கட்சி நிர்வாகி கள், மாவட்டச் செயலாளரை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்த தாகக் கூறப்படுகிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் சிவ காசி சட்டமன்றத் தொகுதியில் அதிமுகவின் வாக்கு வங்கி சரிந்தது. சமீபத்தில் நடைபெற்ற கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலில் சிவகாசி ஒன்றி யத்தை திமுக கூட்டணி கைப்பற்றி யது. எனவே, அமைச்சரின் மேல் உள்ள அதிருப்தியால் தான் மக்கள் அதிமுகவிற்கு வாக்களிக்கவில்லை என உளவுத்துறை மேலிடத்திற்கு தகவல் அனுப்பியது.
இந்தநிலையில், சாத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மனுக்கும், அமைச்சருக்கு மிடையே உள்ள கோஷ்டி மோதல் குறித்து குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையில் செய்தி வெளியானது. செய்தி வெளியான சில நாட்களில் அப்பத்திரிகையின் செய்தியாளர் கார்த்திக் ‘அடையாளம் தெரியாத’ நபர் களால் கொலை வெறித் தாக்கு தலுக்கு உள்ளாக்கப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்து அனைத்துப் பத்திரிகையாளர்கள், திமுக, சிபிஎம் உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு அவர்மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். இந்தத் தகவலை உளவுத்துறை மேலிடத்திற்கு தெரி வித்தது. இதையடுத்து, அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பொறுப்பு வகித்து வந்த அதிமுக மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதாக ஞாயிறன்று மாலை அக்கட்சித் தலைமை அறி வித்தது. கொரோனோ அச்சம் தீர்ந்து சகஜ நிலை திரும்பியவுடன் அவரது அமைச்சர் பதவியும் பறிக்கப்படலாம் என்ற தகவலை கசியவிட்டுள்ளனர் விருதுநகர் மாவட்ட அதிமுகவினர்.
- ந,நி