சோனி லிவ் டிஜிட்டல் தளத்தில் தமிழ் நிகழ்ச்சிகள்
சென்னை,ஜூன் 2நாம் விரும்பும் வீடியோக்களை உடனே பார்க்க உதவும் சோனி லிவ் தனது நேயர்களுக்கு உள்ளூர் பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கத் தமிழில் சேவைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. திரை உலக பிரமுகர்கள் பாலாஜி மோகன் மற்றும் சிங்கீதம் சீனிவாஸ், குட்டி பத்மினி ஆகியோர் சென்னையில் இதனை துவக்கிவைத்தனர். இம் மாதம் முதல் ஏராளமான தமிழ் நிகழ்ச்சிகள் சோனி லிவ்-இல் ஒளிபரப்பாக உள்ளன. ஹர்ஷா இயக்கத்தில், அஸ்வின் காகாமனு மற்றும் சஞ்சனா கல்ரானி ஆகியோர் நடித்துள்ள“தாத்தாவின் பத்திரிக்கையை ஒரு வர்த்தகர் மீட்டெடுக்கும் போராட்டம்’’ பற்றிய ஐவர் திரைப்படமும் இதில் அடங்கும்.நீண்ட காலம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளுள் ஒன்றான க்ரைம் பேட்ரோல், உள்ளூர் கதைகள்மற்றும் கதாபாத்திரங்களைக் கொண்டு டிஜிடல் முறையில் மறு ஆக்கம் செய்யப்படும் என்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியாவின் டிஜிட்டல் வர்த்தக பிரிவு தலைவர் உதய் சோதி கூறினார்.
நகை வாங்குவது போல் நடித்து நகை திருடியவர் கைது
சென்னை,ஜூன் 2எம்.ஜி.ஆர். நகரில் கடையில் நகை வாங்குவது போல் நடித்து 2 பவுன் செயினை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.எம்.ஜி.ஆர். நகர், சூளைபள்ளம் வெங்கட் ராமன் சாலையில் சுனில் ஜூவல்லர்ஸ் என்கிற பெயரில் நகை கடை நடத்தி வருபவர் கெணா ராம். சனிக்கிழமை மாலை இவரது கடைக்கு டிப் டாப் உடை அணிந்த இளம்பெண் ஒருவர் வந்தார். நகை வாங்குவது போல ஏராளமான நகைகளை வாங்கி பார்த்து கொண்டிருந்தார்.சிறிது நேரம் கழித்து அவர் நாளை திரும்பி வந்து நகை வாங்குவதாக கூறி கடையில் இருந்து சென்று விட்டார். அப்போது ஊழியர்கள் நகைகளை சரி பார்த்தபோது 2 பவுன் செயின் மாயமானது தெரிந்தது.அதனை கடைக்கு வந்த இளம் பெண் எடுத்துச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து எம்.ஜி.ஆர். நகர் காவல்நிலையத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் கே.கே. நகர் பாரதிதாசன் சாலையில் சென்று கொண்டிருப்பது தெரிந்தது. அவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.அவர் தேனாம்பேட்டை எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி சுமதி என்பது தெரிந்தது. குடும்ப வறுமை காரணமாக நகை திருட்டில் ஈடுபட்டதாக அவர் கூறியுள்ளார்.