tamilnadu

img

மதுரை ஆட்சியரை உடனே மாற்றுக!

சென்னையில் கே.பாலகிருஷ்ணன் பேட்டி


சென்னை, ஏப். 21 -மதுரை மக்களவைத் தொகுதி தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியரை மாற்ற வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகுவை சந்தித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மனு அளித்தனர்.இதன் பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:பல்வேறு தொகுதிகளில் ஆளும் கட்சிகூட்டணியினரின் வாக்குச்சாவடி கைப்பற்றல்,முறைகேடு, பண விநியோகம் போன்ற வற்றிற்கு மாவட்ட நிர்வாகம் துணை போனது. சிதம்பரம் தொகுதி பொன்பரப்பியில் தலித் மக்களை தாக்கி வாக்களிக்க விடாமல் செய்துள்ளனர். இதுகுறித்தெல்லாம் அவ்வப் போது புகார் அளித்தும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.மதுரையில் மின்னணு வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரி வளாகத்தில், மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி ஆவணங்கள் ஒரு அறையில் (ஸ்டோர் ரூம்) வைக்கப்பட்டுள்ளது. அந்த அறைக்கு கலால் வட்டாட்சியர் சம்பூர்ணம் மற்றும் 3 பேர் சென்றுள்ளனர். அங்கிருந்த ஆவணங்களை வெளியே கொண்டு வந்து ஜெராக்ஸ் எடுத்துள்ளனர். குறிப்பிட்ட அந்த ஒரு அறைக்கு மட்டும்சீல் வைக்காதது ஏன்? மாவட்ட ஆட்சியருக்கு தெரியாமல் இது நடந்திருக்க முடியுமா? எனவே முழுமையான விசாரணை நடத்த வேண்டும், தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி திமுக, சிபிஎம், சிபிஐ, விசிக தலைவர்கள் தலைமை தேர்தல் அதிகாரியிடம் விரிவான மனு கொடுத்துள்ளோம்.அங்கு அதிகாரி சென்றிருந்தாலும் எதுவுமே செய்ய முடியாது என்று மாவட்ட ஆட்சியர் கூறுகிறார். அப்படியென்றால் வட்டாட்சியர் அங்கு செல்ல காரணம் என்ன? எதற்காக ஆவணங்களை எடுக்க வேண்டும்? தபால் வாக்குகளை முறைகேடாக பயன் படுத்த வாய்ப்பு உள்ளது என்பதை மறுக்க முடியுமா?தமிழகத்தில் மின்னணு வாக்கு எந்திரங்கள் வைத்துள்ள அனைத்து மையங்களையும் முழுமையாக துணை ராணுவத்தின் பாது காப்பில் கொண்டு வர வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவரே தவறுக்கு துணை போயிருப்பதால், தலைமை தேர்தல் அதிகாரியே நேரடியாக விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி னோம். அதிகாரிகளை கலந்தாலோசித்து பதிலளிப்பதாக உறுதி அளித்தார்.இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார்.


ஆர்.எஸ்.பாரதி


திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், “மதுரை தொகுதியில்தான் அதிகப்படியான தபால் வாக்குகள் உள்ளன. அந்த தொகுதியில் உள்ள தபால் வாக்குகளில் 40 விழுக்காடுதான் பதிவாகி உள்ளது. மீதமுள்ள 60 விழுக்காடு வாக்குகளைக் கொண்டு முறைகேடு செய்ய அனைத்து ஏற்பாடுகளும் நடந்துள்ளது. குற்றவாளியே (மாவட்ட ஆட்சியர்) விசாரணை நடத்துவது சரியல்ல. ஜனநாயக படுகொலையை வேடிக்கை பார்க்க முடியாது. ஜனநாயகத்தை பாதுகாக்கும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்” என்றார்.


தொல்.திருமாவளவன்


விசிக தலைவர் தொல்.திருமாவளவன் குறிப்பிடுகையில், “மதுரை தொகுதியில் நடந்தது மட்டும் வெளியே தெரிந்துள்ளது. 38 மக்களவைத் தொகுதி, 18 சட்டமன்ற தொகுதிவாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா? அந்த அறைகளுக்கு முத்திரை இடப்பட்டுள்ளதா? ஆவண அறைகள் முத்திரையிடப்பட்டுள்ளதா என்பது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மதுரையில் நடந்திருப்பது திட்டமிட்ட சதி. மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் 2 கட்சிகள் ஒரே அணியில் இருக்கின்றன. எனவே, தேர்தல் அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள் ஆளும் கட்சி தரப்புக்கு ஆதரவாக செயல் பட்டது பிரச்சாரத்தின்போதே தெரிந்தது. வாக்குஎண்ணிக்கையின்போதும் முழுமையாக ஒத்துழைக்க முயற்சிக்கிறார்கள் என்பது மதுரை சம்பவத்தில் வெட்ட வெளிச்சமாகிறது. நீதி கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம்” என்றார்.


இரா.முத்தரசன்


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறுகையில், “வாக்கு ப் பதிவு எந்திரங்கள் மீதமுள்ள 30 நாட்களுக்கு பாதுகாப்பாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மக்கள் வாக்களித்து விட்டார்கள். மோடி, எடப்பாடி மூலம் மோசடி செய்துவிடுவாரோ என்று சந்தேகம் எழுகிறது. மேலதிகாரி உத்தரவில்லாமல் ஒரு வட்டாட்சியரால் தன்னிச்சையாக அறையில் புகுந்து ஆவணங்களை எடுக்க முடியாது. இது ஜனநாயகத்திற்கு பேராபத்து” என்றார்.இந்தச்சந்திப்பின்போது சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி.,மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், சிபிஐ மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், விசிக துணைப்பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் மனு


மதுரை நாடாளுமன்ற தொகுதி யில் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள மின்னணு வாக்கு இயந்திரங்கள் மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சனிக்கிழமை (20.4.2019) மாலை சம்பூர்ணம் என்கிற வட்டாட்சியர் அந்தவளாகத்திற்குள் நுழைந்து ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் மூன்று மணி நேரமாக இருந்திருக்கிறார். அவரோடு வேறு மூன்று நபர்களும் இருந்திருக்கிறார்கள். இவர்களிடம் அடையாள அட்டையும் இல்லை. காவல்துறை அவர்களை மூன்று மணி நேரத்திற்கு பின்பே கண்டுபிடித்து தடுத்து வைத்திருக்கிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக அதிகாரிகள் தலையிட்டு அழைத்துச் சென்றுள்ளனர். மாவட்ட ஆட்சித் தலைவரை தொடர்பு கொள்ளமுயற்சித்து முடியாத நிலையில் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசன் நீண்ட நேரம் போராடியபிறகும், வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட் டுள்ள இடத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர்வரவில்லை. பின்னிரவு 12.30 மணிக்கு பிறகு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்த போது வேட்பாளர் இந்த விசயம் குறித்து தெரிவித்த பிறகு தான் தனக்கு தெரியும் என்று ஆட்சியர் கூறியிருக்கிறார். இது நம்பத்தகுந்ததாக இல்லை. தபால் வாக்குகளில் முறை கேடுகள் செய்வதற்கான முயற்சியாகவே இந்த சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எனவே, 


1.ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட அறையை முத்திரையிட வேண்டாம் என உத்தரவிட்டது யார்?. 


2.சட்டவிரோதமாக ஆவண அறைக்குள் புகுந்த அலுவலருக்கும், அவருடன் சென்ற வர்களுக்கும், அறையை திறப்பதற்கும் ஆவணங்களை எடுப்பதற்கும் உத்தர விட்டவர்கள் யார்? யாரும் அவருக்கு உத்தரவிடவில்லையெனில் சம்பந்தப்பட்ட அலுவலர் யாருக்கும் தெரியாமல் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதன் உள்நோக்கம் என்ன?.


3.மூன்றடுக்கு பாதுகாப்பையும் மீறி ஒருவர் பாதுகாக்கப்பட்ட அறைக்குள் செல்வ தும், அதை மூன்று மணி நேரம் வரை  காவல்துறையினர் கண்டுபிடிக்க முடியா மல் இருப்பதும் எப்படி என்ற கேள்விகள் முக்கியமானவை.


இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. இவ்வளவு மோசமான சம்பவம் நடந்த பிறகும், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் மதுரையிலேயே இருந்த போதும், சம்பவ இடத்திற்கு வராததும், சில மணி நேரங்களுக்கு பின்பு வேட்பாளர் சு. வெங்கடேசன் சொன்ன பிறகு தான் இந்த பிரச்சனையே தனக்கு தெரியும் என்று சொன்னதும் ஆச்சரியமளிக்கிறது.எனவே, கீழ்க்கண்ட கோரிக்கைகளை தலைமை தேர்தல் அதிகாரி உடனடியாக நிறைவேற்றிட வேண்டுமென கோருகிறோம்:


1.நடந்துள்ள இந்த சம்பவம் குறித்து முழுமையான உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். 


2.சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


3.மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மதுரை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியை மாற்றி வேறு அதிகாரியை நியமிக்க வேண்டும்.


4. மதுரை நாடாளுமன்ற தொகுதி உட்பட அனைத்து தொகுதிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப் பட்டுள்ள மையங்களுக்கு முழுமையான துணை ராணுவ பாதுகாப்பு ஏற்பாடு செய்திட வேண்டும்.


5. தபால் வாக்குகள் விநியோகம், பதிவு, எண்ணிக்கை ஆகியவை குறித்து சிறப்பு பார்வையாளரை நியமிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். 

மேற்கண்ட கோரிக்கைகள் வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடைபெற மிகவும் அத்தியாவசியமானதாகும். எனவே, தாங்கள் இந்த கோரிக்கைகள் மீது விரைந்து நடவ டிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.


சென்னையில் ஞாயிறன்று தலைமைத் தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து சிபிஎம் தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன் எம்.பி., க.கனகராஜ், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தோழமைக் கட்சியினர் அளித்த புகார் கடிதத்திலிருந்து...


;