tamilnadu

img

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது வரம்பு அதிகரிப்பு.... அரசாணையை உடனே ரத்து செய்க!

சென்னை:
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது வரம்பு அதிகரிப்பு அரசாணையை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டு ள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர், பொதுத்துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது வரம்பை 58 இல் இருந்து 59 ஆக தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இது எவ்விதத்திலும் பொருத்தமானது அல்ல. இந்த நடவடிக்கையின் மூலமும், ஏற்கனவே அவர்களுடைய அகவிலைப்படி முடக்கம் உள்ளிட்ட ஏற்பாடுகளின் மூலமும் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அரசு மிச்சப்படுத்துகிறது. 

மத்திய அரசிடம் பல்வேறு வகையினங்களில் மாநிலத்துக்கு வர வேண்டிய  தொகையையும், நிவாரண நிதியையும் போராடிப் பெறுகிற துணிச்சல்அற்ற அரசாக, மாநில உரிமைகளை காவு கொடுக்கும் அரசாக, ஊழியர்கள் போராடிப் பெற்ற உரிமைகள் மீதே கைவைக்கும் அரசாக மீண்டும் மீண்டும் அம்பலப்பட்டு நிற்கிறது. இந்த நடவடிக்கையின் மூலம் புதிய நியமனங்கள் தடுக்கப்படும். வேலைவாய்ப்பு மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் சூழலில் இந்த முடிவு  தமிழக இளைஞர்களின், இளம் பெண்களின் எதிர்காலத்தை சூனியமாக்கும். 34 வயதாகியும் அரசு வேலைக்கான கனவோடு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு காத்திருக்கும் லட்சக்கணக்கானவர்களின்  கனவுகளை பொய்ப்பிக்கும். நிரந்தர வேலை வாய்ப்புகளைக் குறைத்து அரசாணை எண் 56 இன் மூலம் வேலைகள் அவுட்சோர்சிங் செய்யப்படுவதும், ஏராளமான ஊழியர்கள் தொகுப்பூதியம், மதிப்பூதியம் அடிப்படையிலேயே பயன்படுத்தப்படுவதும் நிகழ்ந்து கொண்டி ருக்கும் ஆபத்தான சூழலை இது மேலும் சிக்கலாக்கும்.இதனால் பதவி உயர்வுகளும் தள்ளிப்போகும்.  அடுத்த ஆண்டு ஓய்வு பெறும்போது ஆயிரக்கணக்கான அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஓய்வூதியப் பலன்களை அளிக்க அரசிடம் திட்டம் எதுவும் இருப்பதாகவும் தெரியவில்லை. ஓய்வூதியப் பலன்களே ஒட்டுமொத்தமாக கேள்விக்குள்ளாகும் அபாயமும் இதில் தெரிகிறது. இந்தப் பின்னணியில் அரசின் மேற்கண்ட  உத்தரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிப்பதோடு, அந்த அரசாணையை உடனடியாகரத்து செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்துகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அரசு ஊழியர் சங்கம் கடும் எதிர்ப்பு

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு மற்றும் பொதுச் செயலாளர் ஆ.செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயதை 58 என்பதிலிருந்து 59 என உயர்த்தியிருப்பது, அரசு ஊழியர் ஆசிரியர் என்ற சமூகத்தினையும் தாண்டி, தமிழகத்தில் வேலைவாய்ப்பிற்காகக் காத்திருக்கும் இலட்சக்கணக்கான இளைஞர்களின் அரசுப் பணி என்ற கனவினை முற்றிலுமாக ஓராண்டிற்கு முடக்கும் நடவடிக்கை என்பதோடு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஓராண்டிற்கு எந்தவித பணி நியமன நடவடிக்கையினையும் மேற்கொள்ள இயலாத சூழ்நிலையினை உருவாக்கி உள்ளது. இந்த நடவடிக்கையானது, 2003ஆம் ஆண்டு தமிழக அரசு வேலை நியமனத் தடைச் சட்டத்தை இயற்றி, ஐந்தாண்டுகளுக்கு அரசின் காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கு தடை விதித்ததைப்போல், ஓராண்டிற்கு அரசுப் பணிகளுக்கு தடை என்ற ஒரு நிலையினை தமிழக அரசு மறைமுகமாக உருவாக்கி உள்ளது.

மேலும் காலிப் பணியிடங்களை மொத்தமாக தனியார்வசம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை ஓராண்டிற்குள் செய்வதற்கான வழிகளை மேற்கொள்வதற்கான காலஅவகாசமாக எண்ண வேண்டியுள்ளது.  இதன்மூலம் இந்தியாவிலேயே 69 விழுக்காடு இடஒதுக்கீட்டின்மூலம் பாதுகாக்கப்பட்டுவரும் சமூக நீதி என்பது கேள்விக்குறியாகி உள்ளது.மேலும், மே 2020 முதல் ஏப்ரல் 2021 வரையிலான காலத்தில் ஏறத்தாழ 30,000 பேர் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறுவார்கள். பணியிலிருந்து ஓய்வுபெறும் ஊழியருக்கு சராசரியாக ரூ.20 இலட்சம் ஓய்வூதிய காலப் பலன்களைப் பெறுவார் என்று வைத்துக் கொண்டால், இந்த காலத்தில் அரசிற்கு இதனால்  ரூ.6,000 கோடி தொகையானது மிச்சமாகும். இந்தத் தொகையினை அப்படியே மே 2021 முதல் ஏப்ரல் 2022 வரையிலான காலத்திற்கு தற்காலிகமாக ஒத்திவைக்க முடியுமே தவிர, இந்தத் தொகையினை ஓய்வு பெறுவோருக்கு கொடுக்கத்தான் வேண்டும்.

மேலும் இளைஞர்களின் வேலைவாய்ப்பினை காத்திடும் வகையிலும் அரசு ஊழியர் ஆசிரியர் பதவி உயர்வினை பாதுகாக்கும் வகையிலும், அரசு ஊழியர் ஆசிரியர் ஓய்வுபெறும் வயதினை 59 என உயர்த்தி வெளியிடப்பட்ட அரசாணையை உடனடியாக ரத்து செய்து  அறிவிப்பு வெளியிட வேண்டும்.அரசின் கவனத்தை ஈர்த்திட இன்று  (8.5.2020) தமிழகம் முழுவதும் அரசு அலுவலக வளாகங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று கூறியுள்ளனர்.