tamilnadu

img

சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான வர்க்கப் போரின் ஆயுதமாக ஒரு நூல்

தமிழ்நாட்டில் நிலவும் சாதிக் கொடுமை களை, சுரண்டலை, ஒடுக்குமுறைகளை, சாதியமைப்பின் மனிதாபிமானமற்ற தன்மை யை, தீண்டத்தகாதவர்களின் வாழ்க்கையை, 32 அத்தியாயங்களில், எந்தவிதமான ஒப்பனைகளுடனோ மறைமுகமாகவோ இல்லாமல், நேரடியான எளிய வார்த்தை களில் தோழர் பி.சம்பத் அவர்கள் எழுதி யுள்ள நூல் அம்பலப்படுத்துகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், “சாதி ஒடுக்கு முறை எதிர்ப்பு போராட்டங்கள் - கள அனுபவங்கள்” என்ற நூலினை எழுதியுள் ளார். பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள இந்நூல், பிப்ரவரி 9 வெள்ளியன்று சென்னை யில் நடைபெறும் விழாவில் வெளியிடப்படு கிறது. “சாதிய பாகுபாட்டுக்கெதிராக, கிராமம் கிராமமாக எதிர்ப்புக் குரல் எழுப்பி, வலுவான பிணைப்புகளையும் ஒற்றுமையையும் உரு வாக்கி, போராட்டத்தின் மூலம் வெற்றி பெற்ற ஆண், பெண், குழந்தைகளின் அனுபவமாக வந்துள்ள இந்நூல், ஒடுக்கப்பட்ட பிரிவினர்  மற்றும் உழைக்கும் மக்களின் ஜனநாயகத் திற்கான பரந்த போராட்டம் ஆகியவற்றிற் டையே ஒற்றுமையைக் கட்டியெழுப்பிய உத்தியின் மூலம், பல சந்தர்ப்பங்களில் சாதிய ஆதிக்கத்துக்கெதிராக  சவால்விட்டு, அமைப்பாகத் திரண்டு போராடியதன் மூலம் இவ்வெற்றி சாத்தியமானது என்பதைப் பதிவு செய்கிறது.  

இந்நூல் பல முக்கியமான அர சியல் மற்றும் அமைப்பு ரீதியான பிரச்சனை களையும் கேள்விகளையும் எழுப்பி, அதன் மூலம் இந்தியாவின் மற்ற பகுதிகளில் சாதி அமைப்புக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது” என்று, இந்நூலுக்கு அளித்துள்ள முன்னுரையில் பிருந்தா காரத் கூறியுள்ளார்.

“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், பிற வெகுஜன அமைப்புகளுடன் இணைந்து நூற்றுக்கணக்கான கிராமங்களில் தலித்து களுக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு வகையான பாகுபாடுகள் மற்றும் ஒடுக்குமுறைகள் மற்றும் குறிப்பாக தீண்டாமை நடைமுறைகள் பற்றிய விரிவான ஆய்வுகளை நடத்தியது. பிறப்பு முதல் இறப்பு வரை -  அரசாங்க சலுகைகள், பொது இடங்கள் மற்றும் பொது நீர் ஆதாரங்கள் பயன்பாடு போன்ற அனைத்தையும் உள்ளடக்கி,  மனித வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும், சாதியப் பாகுபாட்டின் காரணமாக நடக்கும் 100க்கும் மேற்பட்ட தீண்டாமையின் வடிவங்கள் கண்டறியப்பட்டன.

 ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப் பட்டவை உறுதியான போராட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்தது; பரவலாகப் பிரச்சாரம் செய்யப்பட்டு, அநீதியைக் களைய அறைகூவல் விடப்பட்டது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் போராட்டத்தால் தகனம் செய்யும் இடம் உறுதி செய்யப்பட்ட பாலசமுத்திரம் உட்பட, பல போராட்டங்களில் பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் காணப்பட்டன” என விவரிக்கிறார் பிருந்தா காரத்.

வர்க்கச் சுரண்டலுடன் பின்னிப்பிணைந்த சாதி அமைப்பு
மேலும், “அரசியலமைப்பினால் உத்தர வாதம் செய்யப்பட்ட உரிமைகளை அளித்தல்,  பாகுபாட்டைத் தடைசெய்தல் மற்றும் உறுதி யான நடவடிக்கை எடுத்தல் ஆகியவற்றில் அடைந்த தோல்விக்குக் காரணமான, சாதி அமைப்பின் உட்கூறாகப் பொதிந்துள்ள அமைப்பு ரீதியான, கெட்டிப்படுத்தப்பட்ட பாகு பாட்டை, இந்நூலில் உள்ள அனுபவங்கள் சுட்டிக்காட்டுகின்றன. மேலும், “அரசியலமைப்பினால் உத்தர வாதம் செய்யப்பட்ட உரிமைகளை அளித்தல்,  பாகுபாட்டைத் தடைசெய்தல் மற்றும் உறுதி யான நடவடிக்கை எடுத்தல் ஆகியவற்றில் அடைந்த தோல்விக்குக் காரணமான, சாதி அமைப்பின் உட்கூறாகப் பொதிந்துள்ள அமைப்பு ரீதியான, கெட்டிப்படுத்தப்பட்ட பாகு பாட்டை, இந்நூலில் உள்ள அனுபவங்கள் சுட்டிக்காட்டுகின்றன. 

ஆனால் இதற்கு மாறாக, பொருளாதாரம் மற்றும் சமூக வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் ஊடுருவியுள்ள முதலாளித்துவமானது, சாதி அடிப்படையிலான சமூக உறவுகளுடன் இணைந்திருப்பதோடு மட்டுமல்லாது, தற்போதுள்ள சமத்துவமற்ற உறவுகளை, மனி தர்களாகவே மதிக்கப்படாத தலித்துகளின் உழைப்பைச் சுரண்டுவதைத் தீவிரப்படுத்தும் கருவியாக வடிவமைத்துள்ளது. நூறாண்டு களுக்கும் மேலாக மறுக்கப்பட்டுள்ள, தலித்து களுக்கான நிலவுரிமைக்கு சவாலாக, நிலப்  பங்கீடு மற்றும் நில உரிமையின் முக்கியத்து வம் பற்றிய அத்தியாயம், உரிமை மறுப்பின் வடி வம் மாறியிருக்கலாம்; ஆனால் முக்கியமான உள்ளடக்கம் மாறவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகிறது” என, முன்னுரையில் விவ ரித்துள்ள பிருந்தா காரத், “இந்தியாவில் முத லாளித்துவ வளர்ச்சியின் வடிவம், சாதி  அமைப்பால் உருவாக்கப்பட்ட ‘தீண்டத்தகாத வர்களின்’ உழைப்பிலிருந்து உபரியை வலுக்கட்டாயமாகப் பிரித்தெடுப்பதில் ஆழமாக பின்னிப்பிணைந்துள்ளது. வேறு வார்த்தை களில் கூறுவதானால், வர்க்க சுரண்டல் என்பது சாதி அமைப்பின் இருப்புடன் ஊடும்பாவு மாகப் பிணைந்துள்ளது. மனிதாபிமான உள்ளுணர்வைக் கவர்வதன் மூலம் “சிந்தனை” அல்லது “மனநிலை”யில் மாற்றம் கொண்டுவர வேண்டுமென காந்தியால் பரப்பப்பட்ட கருத்தின் ஒரு பகுதியாக மட்டும் இல்லாமல், சாதியக் கட்டமைப்புகளை சமூக அமைப்பு முறையாகப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை இந்தப் புத்தகம் சுட்டிக்காட்டு கிறது. பரந்த வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதி யாக, தலித் தொழிலாளர்களுக்கு எதிரான  இக்குறிப்பிட்ட பாகுபாடுகளில் தங்கள் கவ னத்தைக் கூர்மைப்படுத்த, தொழிற்சங்கங்கள் போன்ற வர்க்கப் போராட்டங்களை முன் னெடுத்துச் செல்லும் அமைப்புகளுக்கு இந்தப் புத்தகம் உதவும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சாதியப் பண்பாட்டு ஆதிக்கத்திற்கு சவால்
“சாதியப் பண்பாட்டு ஆதிக்கத்திற்கு சவால் விடுவதன் முக்கியத்துவத்தையும் இந்நூல் வலியுறுத்துகிறது. கருத்துலகில் பிராமணிய ஆதிக்கத்திற்கு எதிராக வெற்றிகரமாக நடத்தப்பட்ட சமூக சீர்திருத்த இயக்கங்களின் வரலாற்றில் தமிழ்நாடும் முக்கியமான பங்கு வகிக்கிறது. பெரியார் போன்ற  சிறந்த சமூக சீர்திருத்தவாதிகளின் தலைமை யில், நால்வருண ஆதிக்கத்திற்கும், பெண் களை இரண்டாந்தரமாக நடத்தும் அடிமைத் தனத்திற்கும் எதிரான போராட்டத்தை தமிழகம் வழிநடத்தியது. இது மனித மாண்புக்கான போர். ஆயினும், பிராமணிய ஆதிக்கத்தின் அடுக்கு கள் தங்களை உடனுக்குடன் புதுப்பித்துக் கொண்டு உயிரோட்டமாக உள்ளன என்பதை மநுவாதிகளின் சித்தாந்தங்கள் மற்றும் நடை முறைகளில் அவை பிரதிபலிப்பதைக் கொண்டு  தெளிவாக அறிந்து கொள்ளலாம்; அவை பழையதைத் தக்கவைத்துக்கொண்டு புதிய பிரதிநிதிகளைக் கண்டுபிடிக்கும் திறன் கொண்ட தாகவும் உள்ளன. ஆய்வுகளின் முடிவுகளி லிருந்து இது தெளிவாகிறது.

மேலும், தலித்துகளுக்கு எதிரான வன் கொடுமைகளில், ஓ.பி.சி.  பிரிவினர் சிலர்  அணிதிரட்டப்பட்டதாக புத்தகத்தில் குறிப்பிடப் பட்டுள்ள பல நிகழ்வுகளிலும் இது பிரதிபலிக்  கிறது. தமிழ்நாட்டில், சாதிமறுப்புத் திருமணங் களில், ஆண் தலித் அல்லது மிகப் பிற்படு த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவராகவும், பெண் சாதி சமூகப் படிநிலையில் அவருக்கு மேலே உள்ள சாதியைச் சேர்ந்தவராகவும் இருந்தால் ‘கௌரவக் கொலைகள்’ என்று அழைக்கப்படும் படு பயங்கரக் கொலைகளில் அது வெளிப்படுகிறது” என்றும் எழுதியுள்ளார் பிருந்தா காரத்.

இந்துத்துவாவின் அடிப்படை சாதியம்
“இன்றைய இந்தியாவின் அரசியல் சூழ்நிலையில், தேர்தல் ஆதாயங்களைக் கருத்தில் கொண்டு கூர்மையான சாதி மற்றும்  துணை சாதி அடையாளங்கள் பாதுகாக்கப் பட்டு, முதலாளித்துவ அரசியல் கட்சிகளால் ஊக்குவிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய குறுகிய அடையாள அரசியல், சாதி வெறியையும் சாதிய ஒடுக்குமுறையையும் ஒழிப்பதற்கான போராட்டங்களிலிருந்து வெகு தொலைவில் உள்ளது.  இது பல்வேறு சாதியினரிடையே ‘தங்களுக்கான அடையா ளம்’ என்ற உணர்வை உருவாக்கி சாதி அமைப்பைப் பாதுகாக்கிறது. இந்துத்துவ அரசியலின் வளர்ச்சியானது, சாதிய அமைப் பிற்குள் சாதிகள் “ஒத்துப்போதல்” என்பதை மேலும் கூர்மைப்படுத்தியுள்ளது” என்று, தனது  சமூகவியல் ஆய்வை கச்சிதமான வரிகளில் முன்னுரையில் முன்வைத்துள்ளார் பிருந்தா காரத்.

மேலும், “நடைமுறை அனுபவங்கள், கொள்கைகள், சித்தாந்தத்தின் அடிப்படையில் வர்க்கப் போராட்டம், சமூகப் போராட்டம், பண்பாட்டுப் போராட்டம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பைப் புரிந்துகொள்வது, நச்சுத்தன்மை வாய்ந்த சாதிய அமைப்பை அடித்து நொறுக்குவதற்கு மிக முக்கியமான தாகும். உழைக்கும் மக்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் மீதான அதீத ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலை வெளிச்சமிட்டுக் காட்டி, அதற்கு எதிராக சுரண்டப்படும் ஒட்டுமொத்த மக்களையும் ஒன்றிணைக்கப் பாடுபடும் நடைமுறை உத்தியின் முக்கியத்துவத்தையும் அனுபவத்தின் மூலமாக பி.சம்பத் அவர்களின் நூல் எடுத்துக்காட்டுகிறது.

தொழிலாளிக்கு எதிராக தொழிலாளியை  சாதியின் பெயரால் நிறுத்துவது அல்ல - தொழிலாளிக்கு ஆதரவாக தொழிலாளியை, சாதிக்கு எதிராக ஒருங்கிணைப்பது. தலித் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பாகுபாட்டை எதிர்த்து அனைத்து தொழிலாளர்களும் ஒன்றுபடுவதே தொழிலாளர் வர்க்க ஒற்றுமையின் மையக்கருவாகும்” என்றும் பிருந்தா காரத் வழிகாட்டுகிறார்.

களப் போராளியான நூலாசிரியர்
இந்நூல், தோழர் பி. சம்பத் அவர்களின் இதயத்திலிருந்தும், மூன்று தசாப்தங்களாக தீண்டாமைக்கு எதிராகக் களத்தில் நடத்திய கடுமையான நீடித்தப் போராட்டத்தின் அனுபவத்திலிருந்தும் எழுதப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளராகத் தொடங்கி, 2007 - 10 வரை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நிறுவன அமைப்பாளராகவும்,  அதன் பிறகு தலைவராகவும், பின்னர் 2018 - 22 வரை கௌரவத் தலைவராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் என்ற வகையிலும் சாதிய அமைப்பு மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களில் தன்னை நேரடியாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளவர். சாதியின் கோட்டையை உடைக்க, ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளை முன்னெடுத்துச் செல்ல, சமூக மாற்றத்திற்காக அக்கறையுடன் உழைக்கும் மாபெரும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள அனைவருக்கும் மிகவும் அவசியமான வாசிப்பாக இந்தப் புத்தகத்தைப் பரிந்துரைக்கிறேன் என்றும் பிருந்தா காரத் குறிப்பிட்டுள்ளார். 

சென்னையில் நாளை  பிரகாஷ் காரத் வெளியிடுகிறார்

நூல் வெளியீட்டு விழா 9.2.2024 அன்று வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு சென்னை, தி.நகரில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெறுகிறது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் நூலை வெளியிட, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சிறப்புத் தலைவர் எஸ்.கே. மகேந்திரன் பெற்றுக்கொள்கிறார். பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமூக உரிமைப் போராளிகள் பங்கேற்கிறார்கள்.

போராட்ட வரலாற்றின் பொக்கிஷம்
வரலாறு நெடுகிலும் கம்யூனிஸ்ட்டுகள் இரத்தம் சிந்தி எண்ணற்ற போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தாலும் அவை ஆவணப்படுத்தப்படாமல் – அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லாமல் வழியற்று போய்விட்ட துயரத்தை போக்கும் வகையில் தோழர் பி. சம்பத், சுமார் 50க்கும் மேற்பட்ட களப் போராட்டங்களை தேடிப்பிடித்து ஆவணப்படுத்தியுள்ளார். இப்போராட்டங்களுக்கு இவரது நேரடிப் பங்களிப்பும் மகத்தானது. அந்த வகையில் இந்த நூல் போராட்ட வரலாறுகளின் பொக்கிஷம் என்றால் மிகையாகாது. இவரது சிறந்த பணி மிகுந்த பாராட்டுக்குரியதாகும்.
 

கே. பாலகிருஷ்ணன், மாநில செயலாளர், சிபிஐ(எம்)