தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் பா.ஜ.க நிர்வாகிகளுக்கு இன்று ஆஜராக வேண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலின் போது, கடந்த ஏப்ரல் 6 அன்று சென்னையில் இருந்து புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், சதீஷ், அவரின் சகோதரர் நவீன், லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேர், உரிய ஆவணங்களின்றி 4 கோடி ரூபாய் பணத்துடன் பிடிபட்டனர். இதையடுத்து அந்த நபர்களை கைது செய்த காவல்துறையினர் தாம்பரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த மூன்று நபர்கள் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான புரசைவாக்கத்தில் உள்ள பல கோடி மதிப்பிலான ‘ப்ளூ டைமண்ட்’ என்ற நட்சத்திர ஹோட்டலில் வேலை செய்வதாகவும், இந்த பணத்தை தேர்தல் செலவுக்காக நயினார் நாகேந்திரன் எடுத்து வரச் சொன்னதாகவும் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்தனர்.
இதை அடுத்து நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தாம்பரம் போலீசார் 2 முறை சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் கால அவகாசம் கோரியிருந்தார்.
இதனை அடுத்து, இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்த நவீன், சதீஷ், பெருமாள் உட்பட 15-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதை தொடர்ந்து, பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் மற்றும் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆகியோர் இன்று சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் வெளிமாநிலங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால், அவர்கள் வழக்கறிஞர் மூலம் சிபிசிஐடி போலீசாரிடம் காலஅவகாசம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.