tamilnadu

img

சிஏஏவுக்கு எதிராக ஜன.26-ல் பிரச்சாரம்... தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அறிவிப்பு

சென்னை:
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. இது அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் என்பதால் இதற்கு எதிராக ஜன. 26 குடியரசு தினத்தில் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த உள்ளதாக தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் அருணன் கூறினார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவின் அரசியல் சாசனம் மக்களுக்கு எந்தவொரு மதத்தையும் பின்பற்றும் உரிமையைத் தந்தது. இந்தியக் குடியுரிமை பெற மதம் ஓர் அம்சமாக அரசியல் சாசனத்திலும் இல்லை, மூல குடியுரிமைச் சட்டத்திலும் இல்லை. தற்போதைய மோடி அரசுதான் அதில் மதத்தைப் புகுத்தியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை தொடர்ந்து ஏப்ரல் முதல் “தேசிய மக்கள்தொகை பதிவேடு” துவங்கப் போகிறது. இது பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு போல் அல்ல. இது அனைவரது பூர்வீகத்தையும் தோண்டி எடுப்பதாகும். இந்தியாவில் இந்த இடத்தில், இந்தத் தேதியில் பிறந்தார்கள் என்பதை நாம் நிரூபிக்கவில்லையெனில் அந்நிய நாட்டில் பிறந்தவர்களாகக் கருதப்படுவார்கள்.இந்த என்பிஆரைத் தொடர்ந்து என்ஆர்சி எனப்படும். “தேசிய குடிமக்கள் பதிவேடு” வரப்போகிறது. இதற்கான ஆதாரமாக என்பிஆரில் சேகரிக்கப்பட்ட விபரங்கள் இருக் கும். அதாவது சிஏஏ என்பிஆர், என்ஆர்சி என்பவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இது அமலாகும் போது முஸ்லிம்கள் மட்டுமல்ல, அனைத்து இந்தியர்களின் குடியுரிமையும் பாதிக்கும். நமது பெயர் குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெறாத வரை நாம் குடிமக்கள் அல்ல. பணமதிப்பிழப்பின் போது எத்தனை கோடிப் பேர் வங்கி வாசல்களில் நின்றோமே, அதேபோல் நானும் இந்தியக் குடிமகன்தான் என்று நிரூபிக்க சான்றிதழ் பெற அரசு அலுவலகங்களில் நிற்க வேண்டிய நிலை வரும். 

மத்திய பாஜக அரசு கொண்டு வரும் சட்டங்களால் ஏற்பட்டுள்ள ஆபத்தை அதிமுக அரசு உணராமல் மக்களவையில் ஆதரித்துள்ளது. எனவே, தேசிய குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். என்பிஆர், என்ஆர்சியை அமல்படுத்த மாட்டோம் என அறிவிக்கவேண்டும்.குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இந்திய குடியுரிமையை பாதுகாப்போம் எனவும் தமிழகம் முழுவதும் வருகின்ற 26ஆம் தேதி கிராமம் கிராமமாக, வீடு வீடாகச் சென்று லட்சக்கணக்கான துண்டு பிரசுரங்களை விநியோகிக்க உள்ளோம்.மதநல்லிணக்கத்தை பாதுகாக்க உயிர்நீத்த மாகத்மா காந்தியின் நினைவு நாளான ஜனவரி  30ஆம் தேதி மாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணி வரை ஒரு மணி நேரம் மாநிலம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளோம். இந்த இயக்கத்திற்கு அனைத்து அரசியல் கட்சி, மாணவர், வாலிபர், மாதர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களிடம் ஆதரவு திரட்ட உள்ளோம். பொதுமக்களும் ஆதரவு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இச்சந்திப்பின் போது ஒருங்கிணைப்பாளர் க.உதயகுமார், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை இ.சத்யா, பிஷப் தேவசகாயம், தாவூத் மியாகான் ஆகியோர் உடனிருந்தனர்.

;