சென்னை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள்
சென்னை, ஜூன் 10- தலைநகர் சென்னையில் தினசரி பல்வேறு வழித்தடங்களில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வடக்கு லைனில் சென்னை மூர் மார்க்கெட் - கும்மிடிபூண்டி, மேற்கு லைனில் சென்னை மூர் மார்க்கெட் - திருவள்ளூர், தெற்கு லைனில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, MRTS லைனில் சென்னை கடற்கரை - வேளச்சேரி என ரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது. ஒவ்வொரு லைனிலும் பயணிக்கும் ரயில்களின் எண்ணிக்கை மாறுபடுகிறது. உதா ரணமாக தெற்கு லைனில் 240, மேற்கு லைனில் 229, MRTS லைனில் 134, வடக்கு லைனில் 83 என சராசரியாக ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக பார்த்தால் சென்னை புறநகர் ரயில் சேவை தினசரி சுமார் 1,000 முறை இயக்கப் படுவது கவனிக்கத்தக்கது. அனைத்து சேவைகளிலும் சேர்த்து 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். அதிக பட்ச பயணிகள் எண்ணிக்கை என்பது சென்னை கடற்கரை - தாம்பரம் வழித் தடத்தில் தான். இதில் மட்டும் சராசரியாக 8.2 லட்சம் பயணிகள் பயணிப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு நாளும் நெரிசல்நேரங்களான காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரையிலும் அடங்கும். திங்களன்று மும்பைபுறநகர் ரயிலில் கூட்ட நெரிசல் காரணமாக தொங்கிய படியே பயணித்த பயணி களில் பலர் உயிரிழந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரயில்வே வாரியம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. உடனடியாக மேற்கொள்ள முடியவில்லை எனினும், வரும் 2026 ஜனவரி முதல் புதிய ஏற்பாட்டை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதாவது ஏசி அல்லாத புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் பொருத்தவுள்ளனர். இதற்காக சென்னை ஐ.சி.எஃப் நிறுவனத்துடன் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மறும் ரயில்வே வாரிய அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐசிஎஃப் தானியங்கி கதவு ரயில்கள் தயாரிப்பு '
சென்னை புறநகர் ரயிலிலும் தானியங்கி கதவுகள் பொருத்த வேண்டு மெனவும் அதற்கான ஆர்டர்களை தற்போதே ஐசிஎஃப் நிறுவனத்திடம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் சென்னையில் தானியங்கி கதவு களுடன் கூடிய ஏசி ரயில் பயன் பாட்டிற்கு வந்தது.