tamilnadu

img

இந்நாள் ஜன. 14 இதற்கு முன்னால்

1911 - மவுலானா முகமது அலியின் ‘தி காம்ரேட்’ என்ற ஆங்கில வார இதழ் முதன்முறையாக வெளியா னது. இந்த இதழைத் தொடங்குவதற்கு முன்பே, அவர், தி டைம்ஸ், தி அப்சர்வர் உள்ளிட்ட ஆங்கில இதழ்களில் வீச்சு டைய கட்டுரைகளை எழுதிக்கொண்டிருந்தார். முஸ்லிம் லீகின் நிறுவனர்களுள் ஒருவரான அவர், அதன் நிலைப்பாடுகளை வெளிப்படுத்த காம்ரேட் இதழைத் தொடங்கியது, வங்கப் பிரிவினைக்கு எதிராக, சுதேசி இயக்கம் நடத்திய போராட்டங்களின் உச்சமாக, வன்முறைகள் நிகழ்ந்துகொண்டிருந்த காலத்தில் தான் என்பது கவனிக்கத்தக்கது. இந்த முதல் இதழிலேயே, ‘விரிவடைந்துகொண்டே வரும் இந்து முஸ்லிம் பிளவுக்குக் காரணமான வேறுபாடுகளை வெளிப்படையாக அடையாளம் காணுதல்’ என்ற கட்டுரையை எழுதிய அவர், இந்துக்களும் முஸ்லிம்க ளும் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் தேவையையும் அதில் வலியுறுத்தியிருந்தார்.

வங்கப் பிரிவினை கைவிடப்பட்டு, மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டதை எதிர்த்து காம்ரேட் இதழில் தொடர் கட்டுரைகளை எழுதிய அவர், தி டிரிப்யூன், தி பெங்காலி முதலான இதழ்களின் முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டையும் கடுமையாகக் கண்டித்தார். வங்கப் பிரிவினை ரத்து செய்யப்பட்டது முகமது அலியைக் கடுமை யான அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்று நேரு, ‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ நூலில் குறிப்பிட்டி ருக்கிறார். இஸ்லாமியர்களுக்காக ஹம்தர்த் என்ற உருது நாளிதழையும் அலி நடத்தினார். துருக்கியர்களுக்கு எதிரான இங்கிலாந்தின் நடவடிக்கைகளை காம்ரேட் இதழில் பட்டியலிட்ட அவர், ஆனாலும் (முதல் உலகப்போரில்) நேச நாடுகளுடனேயே துருக்கியர்கள் நிற்க வேண்டுமென்று எழுதியிருந்தார்.

அக்கட்டுரைக்காக காம்ரேட் இதழ் தடைசெய்யப்பட்டு, பிரதிகளும் அரசால் கைப்பற்றப்பட்டன. 1923இல் குறுகிய காலம் காங்கிரசின் தலைவராகவும் அவர் பணியாற்றினார். 1924இல் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தி எழுத மீண்டும் காம்ரேட் இதழை அவர் தொடங்கினாலும், இரண்டாண்டுகளில் நின்றுபோனது. 1930 நவம்பரில் லண்டன் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்ற அவர், இந்தியாவுக்கு விடுதலையளிக்காவிட்டால் உயிருடன் திரும்பப் போவதில்லையென்றும், தனக்கு அங்கேயே மயானம் ஒதுக்கும்படியும் கூறினாராம். ஆங்கிலேய அரசால் அடிக்கடி சிறையிலடைக்கப்பட்டதில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், 1931 ஜனவரியில் பக்கவாதத்தால் அங்கேயே மறைந்து, ஜெருசலேமில் அடக்கம் செய்யப்பட்டார். வங்கத்தின் விடுதலைப்போராட்ட வீரர் முஜிபுர் ரஹ்மான் கான் 1937இல் தொடங்கிய ஆங்கில இதழுக்கு, முகமது அலியின் நினைவாக தி காம்ரேட் என்று பெயரிட்டார். 

- அறிவுக்கடல்