tamilnadu

img

கோவையில் யானை தந்தம் விற்க முயன்ற பெண் உட்பட 6 பேர் கைது

கோவையில் யானைத் தந்தம் விற்பனை செய்ய வந்த பெண் உட்பட ஆறு பேரை வனத்துறை தனிப்படை குழுவினர் மடக்கிப் பிடித்து  கைது செய்தனர். 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வழியாக நீலகிரியில் இருந்து யானைத்தந்தம் கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுக்கரை வனச்சரகம் மற்றும் கோவை வனச்சரக வனத்துறையினர் இரண்டு வனச்சரகர் தலைமையில் சுமார் 20 பேர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். 

மேலும் சந்தேகிக்கப்பட்ட இரண்டு வாகனங்களைத் தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வந்த நிலையில்,  கோவை துடியலூர் அருகே கார் வந்த போது மடக்கிப் பிடித்தனர். பின்னர் பிடிபட்ட நபர்களை விசாரித்த போது அவர்கள் கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த சர்வேஷ் பாபு (46),  கூடலூர் சேர்ந்த சங்கீதா (41),  இடையபாளையத்தைச் சேர்ந்த விக்னேஷ் (31),  வெள்ளலூர் சேர்ந்த லோகநாதன் (38),  நாகமநாயக்கனாயன் பாளையம் பகுதியைச் சேர்ந்த அருள் ஆரோக்கியம் (42),  பாலமுருகன் (47) என்பதும் தெரியவந்தது. 

மேலும் இவர்கள் வனத்துறை அதிகாரிகள் பின் தொடர்வதைக் கண்டு யானைத் தந்தங்களைச் சாலை ஓரத்தில் வீசி சென்றதாக விசாரணையில்  தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில் பிடிபட்ட நபர்களை அழைத்துச் சென்று அவர்கள் கூறிய பகுதியில் சோதனை செய்தபோது அங்கு யானைத் தந்தங்கள் ஏதும் கிடைக்கவில்லை.  இந்நிலையில் பிடிபட்ட ஆறு பேரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட வனத்துறையினர்,  அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்கவும் வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். 

;