tamilnadu

img

குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்து - நீர் உந்து நிலைய அலுவலகத்தில் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்

குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாமன்ற உறுப்பினர்கள் நீர் உந்து நிலைய அலுவலகத்தினுள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 11 ஆவது வார்டு மற்றும் 12, 13,14, 21, 2,3 ஆகிய வார்டுகளில் கூடுதலாக குடிநீர் பிரச்சனை உள்ளது. ஏற்கனவே இப்பகுதிகள் பேரூராட்சி வசம் இருந்தபோது நாள்தோறும் குடிநீர் விநியோகம் என்பது இருந்து வந்தது. மாநகராட்சி விரிவடைந்து இப்பகுதிகள் இணைக்கப்பட்ட பிறகு குடிநீர் பிரச்சனை என்பது தொடர்ந்து முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறது. மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் என்று இருந்த நிலையில் வாரம் ஒருமுறை என்றாகி தற்போது பத்து நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் விநியோகம் என்றாகிப்போனது. இதுகுறித்து தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கைகளை எழுப்பியும், போராட்டம் நடத்தியும் வந்தது. அப்போதைக்கு அப்போது சமாதானம் செய்யும் அதிகாரிகள் நிரந்திர தீர்வை எடுக்கவில்லை. இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் 13 ஆவது மாமன்ற உறுப்பினர் வி.இராமமூர்த்தி, 14 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் என்.சுமதி தலைமையில் சின்னமேட்டுப்பாளையத்தில் உள்ள நீர் உந்து நிலையத்திற்குள் சென்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையறிந்து மதிமுக 14 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சித்ரா உள்ளிட்ட இதர மாமன்ற உறுப்பினர்களும் குடிநீர் பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து இப்போராட்டத்தில் இணைந்தனர்.  
இதுகுறித்து சிபிஎம் மாமன்ற உறுப்பினர் வி.இராமமூர்த்தி கூறுகையில், வெள்ளக்கிணறு, உடையாம்பாளையம், நஞ்சேகவுண்டம்புதூர், சுப்பநாயக்கன்புதூர், சின்ன மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், குடிநீர் பிரச்சனை என்பது தொடர்ந்து முறைப்படுத்தப்படாமலேயே இருக்கிறது. நாங்கள் கூடுதலான குடிநீரை கேட்கவில்லை. ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்ட குடிநீரை விநியோகிக்க வேண்டும் என்றே கேட்கிறோம். தொழிற்நுட்ப ரீதியில் ஆய்வு மேற்கொண்டு குடிநீரை வழங்க வேண்டும் தொடர்ந்து முறையிட்டு வந்தோம், எந்த முன்னேற்றமும் ஏற்படாத காரணத்தால் தாற்போது நீர் உந்து நிலை அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்றார்.
சிபிஎம் கவுன்சிலர்கள் தலைமையில் இதர கவுன்சிலர்கள் இணைந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அடுத்த வடக்கு மண்டல கூட்டத்திற்கு முன்னதாக உரிய ஆய்வு மேற்கொள்கிறோம் என்றும், குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தும் அறிக்கையை அக்கூட்டத்திலேயே முன்வைக்கிறோம் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் கலைந்து சென்றனர்.  
முன்னதாக மாமன்ற உறுப்பினர்களின் உள்ளிருப்பு போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கீரணத்தம் ஊராட்சி துணை தலைவரும், சிபிஎம் எஸ்.எஸ்.குளம் ஒன்றிய கிழக்கு பகுதி செயலாளருமான ஆர்.கோபால் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

;