பெரியார் பெயரில் ஆரம்பிக்க இருந்த உணவகத்தை அடித்து நொறுக்கி இந்து முன்னணியினர் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் காரமடை அருகே கண்ணார்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் கறிக்கோழி விற்பனை செய்து வருகிறார். இவரது நண்பர் அருண். இந்நிலையில் பிரபாகரன், மற்றும் அருண் இருவரும் இணைந்து புதிதாக உணவகம் திறக்க முடிவு செய்துள்ளனர். இந்த உணவகத்திற்கு தந்தை பெரியார் உணவகம் என அருண் பெயர் வைத்து, பெயர் பலகையை வைத்துள்ளார். இன்று உணவகம் திறக்க இருந்த நிலையில் நேற்று இரவு கடைக்கு வந்த இந்து முன்னனியை சேர்ந்த குண்டர்கள் இந்த பகுதி இந்து அமைப்பின் கோட்டை. அதனால் இங்கு பெரியார் பெயரில் உணவகம் வைக்க கூடாது என தெரிவித்து கடையை அடித்து நொறுக்கியுள்ளனர். இதை தட்டிக்கேட்ட அருணின் தயாரை மிரட்டியதோடு, அருணை சரமாரியாகத் தாக்கியும் உள்ளனர்.
இதில் பலத்த காயம் அடைந்த அருண் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பிரபாகரன் காரமடை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் உணவகம் மற்றும் உரிமையாளர் மீது தாக்குதல் நடத்திய இந்து முன்னனி கிளை செயலாளர் ரவி பாரதி, சரவணக்குமார், சுனில், விஜயகுமார், பிரபு, பிரபாகரன் ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகம் செய்தல், ஆபாசமாக பேசுதல், அத்துமீறல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.