அரசுப் பேருந்தின் படிக்கட்டு கழன்று விழுந்ததால் பயணிகள் அதிர்ச்சி
நாமக்கல், அக்.8- ஓடிக்கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்புற படிக்கட்டு கழண்டு சாலையில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்திலிருந்து ஈரோடு வரை K1 என்ற அரசுப் பேருந்து தினந்தோறும் இயக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில், புதனன்று காலை, குமார பாளையத்திலிருந்து பள்ளிபாளையம் நோக்கிச் சென்ற இந்த அரசுப் பேருந்து, ஆவத்திப்பாளையம் பகுதி அருகே வந்து கொண்டிருந்தது. காலை நேரம் என்பதால், மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 60-க்கும் மேற்பட்டோர் பேருந்தில் பயணம் செய்தனர். ஏராள மான மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டுகளில் நின்றபடியே பயணித்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில், ஆவத்திப் பாளையம் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றுவதற் காகப் பேருந்து நின்றது. பின்னர், பேருந்து மெதுவாக நகர்ந்து, ஒரு வேகத்தடையின் மேல் ஏறி இறங்கியது. அப்போது எதிர் பாராத விதமாகப் பேருந்தின் பின்புறப் படிக்கட்டுப் பகுதி கழன்று கீழே விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் உடனடியாகப் பேருந்தை பவானி பணிமனைக்கு எடுத்துச் சென்றார். பயணிகளை மாற்றுப்பேருந்தில் அனுப்பிவைத்தனர். அரசுப் பேருந்தின் பின்புறப் படிக்கட்டுப் பகுதி கழன்று விழுந்த இந்த சம்பவம், பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
