tamilnadu

img

அ.ராஜாவை இழிவாக பேசி மிரட்டிய கோவை மாவட்ட பாஜக தலைவர்

நீலகிரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.ராஜாவை இழிவாக பேசி மிரட்டல் விடுத்த பாஜக கோவை மாவட்டத்தலைவர் பாலாஜி உத்தமராமசாமியை காவல்துறையினர் கைது செய்தனர். 

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் எப்படியாவது வன்முறையை கட்டவிழ்த்து விட்டு குறுக்கு வழியில் அரசியல் ஆதாயம் தேட சங்பரிவார் அமைப்புகள் தொடர்ந்து முயன்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்து முன்னணி அ.ராஜா எம்.பி இந்துகளை இழிவாக பேசியதாக வதந்தியை பரப்பி மேற்கு மாவட்டங்களில்  நேற்று கடையடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்திருந்தனர். 

ஆனால் அ.ராஜா எம்.பி மனுஸ்மிருதியில் சூத்திரர்கள் எவ்வாறு இழிவு படுத்தப்பட்டிருக்கின்றனர் என்பதையே விளக்கி பேசியிருந்தார். அதனை அப்படியே மாற்றி ராஜா இந்துக்களை தவறாக பேசியதாக கூறி சமூக ஊடகங்களில் திரித்து அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதனையறிந்த மக்கள் இந்து முன்னணியின் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க முன்வரவில்லை. இதனால் விரக்தியான இந்து முன்னணியினர் பல்வேறு பகுதிகளிலிருந்து வரவழைக்கப்பட்ட இந்து முன்னணி குண்டர்களை பயன்படுத்தி அவிநாசி, நீலகிரி, சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வணிகர்களை மிரட்டி கடைகளை அடைக்கச் செய்தனர். சில கடைகளை அடித்தும் சூறையாடினர். இதில் வன்முறையை தூண்டி வந்த சிலரை மட்டும் காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் இதுகுறித்து மீண்டும் விளக்கம் அளித்த திமுக எம்பி ராஜா'' சூத்திரர்கள் யார்? அவர்கள் இந்துக்கள் இல்லையா? மனுஸ்மிருதி உள்ளிட்ட நூல்களில் ஏன் இழிவுபடுத்தப்பட்டு, கல்வி–வேலைவாய்ப்பு-கோவில் நுழைவு மறுக்கப்பட்டது. அரசியல் அதிகாரத்தாலும் – பரப்புரையாலும் 90% இந்து மக்களின் இவ்வுரிமைகளை மீட்ட திராவிட இயக்கம் எப்படி இந்துக்களுக்கு எதிரியாகும்! என கேள்வியெழுப்பியிருந்தார்.

முன்னதாக இந்துமுன்னணி கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் பாஜக மாவட்டத்தலைவர் பாலாஜி உத்தமராமசாமி பங்கேற்று, அ.ராஜா எம்பி தைரியமிருந்தால் கோவையில் கால் வைத்து பார்!, என்றும், மிக இழிவான முறையில், திமுகவினரையும், அதன் தலைவர்களையும் பேசி மிரட்டல் விடுத்திருந்தார். 

இதையடுத்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் காவல்துறையினர் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க காலம் தாழ்த்தியதால் இரவில் அங்கு ஏராளமானோர் குவியத்துவங்கினர். இந்நிலையில்  காவல்துறையினர் இன்று காலை பாலாஜி உத்தமராமசாமியை பீளமேட்டில் கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். நீதிபதி 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நிலையில் மிரட்டல் விடுத்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகையில் நான் பேசியதிலிருந்து ஒரு சதவீதம் கூட பின்வாங்க மாட்டேன் என்று தெரிவித்தார். 

 

;