திருப்பூர், ஏப். 7 -திருப்பூர் மாவட்டம் வெள்ள கோவில் அருகே உள்ள வட்டமலைக்கரை அணைக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்த முன்வருவதோடு, உறுதிமொழி படிவத்தில் கையொப்பமிடும் வேட்பாளருக்கே இந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க உள்ளதாக அந்த வட்டாரத்தைச் சேர்ந்த கிராம மக்கள் ப்ளக்ஸ் வைத்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.வெள்ளகோவில் அருகே 600 ஏக்கர் பரப்பில் 30 அடி உயரம் தண்ணீர் தேங்கும் வகையில், கடந்த 1979 ஆம் ஆண்டு வட்டமலைக்கரை ஓடை தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டது. இந்த அணையின் கொள்ளளவு 0.95 டிஎம்சி. இந்த அணையின் மூலம் 6043 ஏக்கர் பாசன நிலங்களும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு குடிநீரும் நிறைவு செய்யும் வகையில் இந்த அணை கட்டப்பட்டது. ஆனால் கடந்த 30 ஆண்டுகளாக தண்ணீர் வரத்து இல்லாமல் வட்டமலைக்கரை ஓடை அணை காய்ந்து கிடக்கிறது.பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் கள்ளிபாளையம் மதகு வழியாக வட்டமலைக்கரை தடுப்பணைக்கு உபரி நீர் திறக்க அரசாணை இருந்தும், இதுவரை ஒரு முறை கூட தண்ணீர் திறக்கப்படவில்லை.அதே போல் ரூ.255 கோடி மதிப்பில் கடந்த 10 ஆண்டுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ள அமராவதி வெள்ள நீர் கால்வாய் இணைப்பு திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.இதன் காரணமாக இடது மற்றும் வலது வாய்க்கால்கள் மூலம் பயன்பெறும் உத்தமபாளையம், இலக்குமநாய்க்கன்பட்டி, புதுப்பை, வேலப்ப நாயக்கன் வலசு மற்றும் வெள்ளகோவில் நகராட்சி பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதோடு,விவசாயமும் பொய்த்து போய் இப்பகுதி விவசாயிகள் கடுமையாகச் சிரமப்பட்டு கொண்டிருக்கின்றனர்.ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் உள்ள இந்த அணைக்கு தண்ணீர் கொண்டு வரும் வேட்பாளருக்கே தங்களின் வாக்கு என தாசவநாயக்கன்பட்டியில் ப்ளக்ஸ் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் சமூக ஊடகங்களிலும் அப்பகுதியை சேர்ந்த அணையால் பயன்பெறும் விவசாயிகள் இத்தகவலை வெளியிட்டுள்ளனர். இங்கு ஆறுக்கும் மேற்பட்ட கிராமங்களில் 25 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில், அமராவதி -வட்டமலை அணை வெள்ள நீர் இணைப்பு கால்வாய் திட்டம் செயல்படுத்துதல் உள்ளிட்ட 6 வாக்குறுதிகளை ஏற்று உறுமொழி படிவத்தில் கையெழுத்திடும் வேட்பாளருக்கு மட்டுமே இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் வாக்களிப்பது என முடிவு செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.