tamilnadu

சேலம்,ஈரோடு,தாராபுரம் மற்றும் அவிநாசி முக்கிய செய்திகள்

நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தை வேறு பகுதிக்கு மாற்றிடுக


சேலத்தில் பொதுமக்கள் சாலை மறியல்


சேலம், ஏப்.24- சேலத்தில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தை வேறு பகுதிக்கு மாற்றக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரம்மனூர் காட்டுவளவு பகுதியில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த நுண்ணுயிர் தயாரிப்பு மையத்தில் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் குப்பை மற்றும் கழிவு பொருட்களை தரம் பிரித்து அதில் இருந்து நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதேநேரம், இப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது. தற்சமயம் பல்வேறு பகுதியில் இருந்து கொண்டு வந்த கொட்டப்படும் இந்த கழிவுகளால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதால் அப்பகுதியில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, இந்த நுண்ணுயிர் உரம் தயாரிக்க மையத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்நிலையில் இக்கோரிக்கையை வலியுறுத்தி புதனன்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் சேலம் புதிய பேருந்து நிலையம் செல்லும் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் சென்றனர். இந்த திடீர் மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


சாக்கடையை சுத்தம் செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்


ஈரோடு, ஏப். 24-ஈரோட்டில் பரவலான மழை பொழிவினால் தாழ்வான வீடுகளில் சாக்கடை புகுந்தது. இதனை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 5 ஆவது வார்டு பகுதியான மோசிகீரனார் 3 ஆவது வீதி பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக சாக்கடைகள் சரியாக தூர் வாரப்படாமல் உள்ளன. கோடை மழையின் காரணமாக மழை நீருடன் சாக்கடை கழிவுகள், குப்பைகள் ஆகியவை வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதனால், அப்பகுதியை சேர்ந்த 100 க்கு மேற்பட்டவர்கள் சாக்கடையை சரியாக தூர் வார வேண்டும். இல்லையென்றால் இப்பகுதி மக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என வலியுறுத்தி மாநகராட்சி குப்பை அள்ளும் வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்து வந்த ஈரோடு நகர காவல்துறை ஆய்வாளர் பன்னீர்செல்வம் மற்றும் மாநகராட்சி அலுவலர் சுமதி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.


பாறைக்குழியில் விழுந்த தொழிலாளி பலி 3 நாட்களுக்குக்கு பிறகு உடல் மீட்பு


தாராபுரம், ஏப்.24 -தாராபுரம் அருகே பாறைக்குழியில் விழுந்த பலியான தொழிலாளியின் உடலை 3 நாட்களுக்கு பிறகு தீயணைப்பு படையினர் மீட்டனர்.தாராபுரம் அடுத்துள்ள காங்கயம்பாளையத்தை சேர்ந்தவர் நாட்ராயன் (60). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சந்திராபுரம் டாஸ்மாக் பாரில் வேலை செய்து வந்தார். பின்பு கோவைக்கு சென்று அங்கு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தேர்தலுக்காக ஓட்டுபோட சொந்த ஊருக்கு வந்த நாட்ராயன் பழைய நண்பர்களை பார்ப்பதற்காக சந்திராபுரம் டாஸ்மாக் பாருக்கு வந்துள்ளார். இரண்டு நாட்களாக அங்கேயே தூங்கி உள்ளார். ஞாயிறன்று பார் ஊழியர்கள் அருகில்இருந்த பாறைக்குழியில் குளிக்க சென்றபோது நாட்ராயனும் சென்றுள்ளார். மற்ற ஊழியர்கள் குளித்து விட்டு கரையேறும்போது நாட்ராயன் சிறிதுநேரம் குளித்துவிட்டு வருவதாக கூறினார். அதனால் நண்பர்கள் சென்றுவிட்டனர். இந்நிலையில் நீண்ட நேரம் ஆகியும் நாட்ராயன் வராததால் குளித்த இடத்திற்கு நண்பர்கள் வந்து பார்த்தபோது அவரது வேட்டி சட்டை அங்கேயே கிடந்ததுள்ளது. இதில் சந்தேகப்பட்டு தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கும் அலங்கியம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தாராபுரம் தீயணைப்பு அதிகாரி ராஜா ஜெயசிங் தலைமையிலான தீயணைப்பு மீட்பு குழுவினர் மூன்று நாட்களாக உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் செவ்வாயன்று காலை பாறைக்கடியில் சிக்கிய நாட்ராயன் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து அலங்கியம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


வாக்களிக்க சென்ற தொழிலாளி தேனீக்கள் கொட்டியதால் மரணம்


அவிநாசி, ஏப்.24-அவிநாசி அருகே வாக்களிக்க தொழிலாளி தேனீக்கள் கொட்டியதால் சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சேவூர் அருகே வடுகபாளையம் ஊராட்சி முத்தையர் காலனி பகுதியை சேர்ந்த பாண்டியன் மகன் கருப்பசாமி (45). கூலித் தொழிலாளி. இவருக்கு ஜோதிமணி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளன. இவர் கடந்த 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்களிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சேவூர் சாலை மாரப்பம்பாளையம் அருகே வந்த போது சாலையோர மரத்திலிருந்து மலை தேனீக்கள் கூட்டமாக வந்து இவரது முகம் மற்றும் உடல் முழுவதும் கொட்டியது. இதில் அவர் மயக்கம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அவிநாசி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தேனீக்கள் கொட்டியதால் விஷத்தன்மை அதிகரித்து கருப்பசாமியின் இதயம் மற்றும் ரத்தக்குழாய் ஆகிய பகுதிகளை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் சிகிச்சை பலனின்றி புதனன்று அதிகாலை 4 மணியளவில் உயிரிழந்தார். இதுகுறித்து சேவூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.;