கோவை, ஏப்.17- தனியார் மருத்துவ மனையின் அலட்சியத்தால் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட தாய், சேர் உயிரிழந்த சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை சிவானந்தா காலனி பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ், நிர்மலா தம்பதியினர். நிர்மலா கோவை அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் பிரசவத்திற்காக கடந்த ஆறு மாதங்களாக பீளமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அரசுமருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் பணிபுரிந்து வரும் மருத்துவர் திலகவதி, செவிலியர் நிர்மலாவிற்கு தனது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தருவதாக அழைத்துச் சென்றுள்ளார். இதில் பிரசவ நேரத்தில் சிகிச்சை அளிக்க மருத்துவர் திலகவதி இல்லாததால் செவிலியர் மட்டுமே சிகிச்சை அளித்துள்ளார். அப்போது பிரசவ வலியால் நிர்மலா துடித்துள்ளார். இதனையடுத்து திலகவதிக்கு செல்போன் மூலம் அழைத்து பேசியுள்ளார். இதன்பின் மூன்று மணி நேரம் கழித்தே திலகவதி காலதாமதமாக வந்துள்ளார். இதற்குள் திடீரென வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட நிர்மலாவிற்கு உரிய சிகிச்சை கொடுக்காததால் வயிற்றிலேயே குழந்தை இறந்துள்ளது. மேலும் புதனன்று கர்ப்பிணி பெண் நிர்மலாவும் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து தனியார் மருத்துவமனையின் அலட்சியம் காரணமாகவே தாய், சேய் உயிரிழந்துள்ளதாகவும், இச்சம்பவம் தொடர்பாக மருத்துவர் திலகவதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரது உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து மறியல்போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின்பேரில் அனைவரும் கலைந்துசென்றனர்.