கோவை பன்னிமடை அருகே உள்ள திப்பனூர் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரின் மகள், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறாள். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற சிறுமி மாலை வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் காணாததால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் கஸ்தூரி நாயக்கன் புதூர் என்கிற இடத்தில், கத்தியால் அறுபட்ட நிலையில், கை கால்கள் கட்டப்பட்டு சிறுமியின் உடல் கிடந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், குழந்தையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒன்றாம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.