tamilnadu

img

10 நாட்களாக நீலகிரியைப் பற்றித்தான் பேசியிருக்கிறேன்

மேட்டுப்பாளையம், ஏப். 3-


10 நாட்களாக மேற்கொண்டு வருகிற பிரச்சாரத்தில் நீலகிரியைப் பற்றித்தான் பேசியிருக்கிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசாவைஆதரித்து செவ்வாயன்று மாலை மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.அப்போது அவர் பேசியதாவது:இந்தத் தேர்தலில் நீங்கள் அளிக்கப் போகும் ஓட்டு என்பது வெறும் ஒரு ஓட்டு அல்ல, இந்தியாவின் தலையெழுத்தை, தமிழகத்தின் தலையெழுத்தை, உங்கள் வாழ்க்கையின் வாழ்வாதாரத்தை நிர்ண யிக்கின்ற ஓட்டு என்பதை நீங்கள் தயவு செய்து மறந்து விடக்கூடாது. கடந்த காலங்களில் செய்த ஒரு மிகப்பெரிய தவறால் தவறானமனிதர்கள், மத்தியிலும் மாநிலத்திலும்இன்றைக்கு ஆட்சியில் அமர்ந்திருக் கிறார்கள். அதிகாரம் அவர்களது கைக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது.நான் கடந்த 10 நாட்களாக தமிழகம்முழுவதும் சுற்றி வந்து கொண்டிருக் கின்றேன். இருந்தாலும் இந்த 10 நாட்களும் நீலகிரியை பற்றித்தான் நான் பேசி இருக்கின்றேன்.


என்னுடைய பிரச்சாரத்தில் ஒரு சொல்லை மறக்காமல் ஒவ்வொரு கூட்டத்திலும் பேசி இருக்கின்றேன், அதுதான் கொடநாடு. முன்பு பேசியது மட்டுமல்ல,இப்பொழுது பேசப்போவது மட்டுமல்ல தொடர்ந்து பேசுவேன். குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்கும் வரை பேசுவேன். பேசாமல் இருக்க மாட்டேன், அதனால்தான் இந்த நீலகிரியை நான் மறக்கவில்லை என்று சொன்னேன்.ஒரு முதலமைச்சர் மீது அரசியல் ரீதியாக விமர்சனம் வரலாம், அவரின் செயல்பாடுகள் சரியாக இல்லை குற்றமிருக்கிறது என்ற விமர்சனம் வரலாம். அவர் சொன்ன கருத்தின் மீது விமர்சனம் செய்யக்கூடிய நிலை வரலாம். ஆனால் ஒரு கொலைக் குற்றச்சாட்டு ஒரு முதலமைச்சர் மீது வரலாமா? அடியாட்களை அனுப்பி கொள்ளையடித்தார் என்ற குற்றச்சாட்டு வரலாமா? அப்படிப்பட்ட அவமானத்தை சந்தித்து இருக்கக்கூடியவர் தான் இன்றைக்கு முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி.கொடநாட்டில் 2000 கோடி ரூபாய் பணமும், ஊழல் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்ட பென்டிரைவும் உள்ளது. அதை எடுப்பதற்காக, கொட நாட்டில் கூலிப்படைமூலம் கொள்ளையும், அதைத்தொடர்ந்து 5 கொலையும் நடந்திருக்கிறது. கொள்ளைக்கு காரணமான கனகராஜ் இறந்த பின்பு அவரின் சகோதரர் ஒரு பேட்டி தருகின்றார். என்னவென்றால், என் தம்பி இறந்தது திட்டமிட்ட கொலை, விபத்து நடந்த இடத்தை நானே நேரடியாக பார்த்தேன், என்னுடைய தம்பியின் இறப்பிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என்று பேட்டி கொடுத்திருக்கின்றார்.கொடநாடு விவகாரத்தில் முத லமைச்சரை சம்பந்தப்படுத்தி பேசக்கூடாது தடை உத்தரவு போட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டார்கள். ஆனால், ஸ்டாலின் பேசுவதில் தப்பில்லை, நடந்த சம்பவத்தை பேசுகின்றார் என்று உத்தரவு வந்துள்ளது. இனிமேல் நான் ஒரு படி மேலே போய்த்தான் பேசப்போகின்றேன்.


நாம் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு நான் நிச்சயமாக இவர்களை சும்மா விடமாட்டேன். ஆனால், நாங்கள் தண்டிப்பதற்கு முன்பு நீங்கள் தண்டிக்க வேண்டுமா? வேண்டாமா? வருகின்ற 18ஆம் தேதி உங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. அந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்த வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகத்தின்தேர்தல் அறிக்கையில் கொடநாடு விவகாரம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தப்படும் என்று தெளிவாகச் சொல்லி இருக்கின்றோம்.நான் இந்தக் கூட்டத்திற்கு வருவதற்காக தங்கியிருந்த அறையில் இருந்து வெளியில் வரும் பொழுது இரண்டு பெண் காவலர்கள் இருந்தார்கள். என்னைப் பார்த்ததும் வணக்கம் வைத்தார்கள், பதிலுக்கு நானும் வணக்கம் வைத்தேன். ஒரு செல்பி எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டார்கள். “போலீசாக இருக்கின்றார்களே என்பதை மதித்து, எந்த ஊர்? என்று கேட்டேன், அவர்கள் மிகவும் வெட்கப்பட்டார்கள். என்ன வெட்கம் என்று கடைசியில் தான்தெரிகின்றது. பொள்ளாச்சி என்று சொல்வதற்கே வெட்கப்படுகிறார்கள் என்று.அந்தளவிற்கு இந்தப் பொல்லாத ஆட்சி யாக பொள்ளாச்சி சம்பவம் நடைபெற்று இருக்கின்றது.7 வருடமாக 200க்கும் மேற்பட்ட இளம் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கின்றது, இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றார்கள். அவர் என்மீது ஸ்டே வாங்குவார் என்று நினைத்தேன் இன்னும் வாங்கவில்லை.சில தினங்களுக்கு முன்பு கோவையில் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த 7 வயது சிறுமியின் வீட்டிற்கு இன்று காலை யில் சென்றேன். ஏழ்மையான குடும்பம். காரோட்டியின் மகள் அவள். அவர்களுக்கு நாங்கள் ஆறுதல் சொல்லி விட்டு வந்தோம். கவலைப்படாதீர்கள் குற்றவாளிகளை தி.மு.க ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு கண்டிக்கும்! தண்டிக்கும்! அதற்கு நீங்கள்கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று ஆறுதல் சொல்லி விட்டு வந்தோம். என்னதான் ஆறுதல் சொன்னாலும் அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா? இப்படிப்பட்ட நிலையில்தான் ஒரு அக்கிரம ஆட்சி நடந்து கொண்டி ருக்கின்றது.கடந்த 2006 இல் நடந்த தேர்தலில் தி.மு.க-விற்கும், அ.தி.மு.க-விற்கும் உண்டான வெற்றி வாய்ப்பு சதவிகிதம் 1:1 என்ற அளவுதான். மக்கள் வாக்களித்தது ஜெயலலிதா அவர்கள் முதல்வராக வேண்டும் என்றுதான். ஆனால், அவர்இப்பொழுது இல்லை மறைந்துவிட்டார். அவரால் உருவாக்கப்பட்ட இவர்கள்இன்றைக்கு பொறுப்பில் இருக்கிறார்கள்.யாரால் பொறுப்பிற்கு உருவாக்கப் பட்டார்களோ அந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களின் மரணமே இன்றைக்கு மர்மமான முறையில் உலவிக் கொண்டி ருக்கிறது. அம்மையார் ஜெயலலிதா அவர்கள் உடல்நலம் நலிவுற்று அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்திருந்த போது, அவரின் உடல்நலம் குறித்து முறையான மருத்துவ அறிக்கை வெளி யிடப்பட்டதா?அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இறந்ததும், ஓ.பன்னீர் செல்வம் அவர்கள்முதலமைச்சரானார். என்னைப் பார்த்து சிரித்ததால் அவர் பதவி பறிக்கப்படுகின்றது. அதன்பின், சசிகலா முதல்வர் ஆக துடித்தார்.அவர் முதல்வர் ஆவதற்கு முன்பு ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வந்து சிறைக்குச் செல்கின்றார். அதன் பின் நடந்த கொடுமைகள் அனைத்தும் உங்களுக்கு நன்றாகத் தெரியும்.நான் எடப்பாடி பழனிசாமி அவர்களை மண்புழு என்று சொன்ன காரணத்தால், எடப்பாடி பழனிசாமி அவர்கள் மண் புழு விவசாயிகளின் நண்பன் என்று சொல்லியிருக்கின்றார். மண்புழு என்றால் பூமிக்கடியில் போகும். விஷப்புழு என்றால், சசிகலாவின் காலுக்கு அடியில் இவர் போனார். இவர் தான் சரியான ஆள் என்று அவரை முதலமைச்சராக்கி விட்டு சசிகலா சிறைக்கு போனார்.அதன்பிறகு ஓ.பி.எஸ், அம்மையார் சமாதிக்குச் சென்று தியானம் செய்கின்றார், மரணத்தில் மர்மம் உள்ளது, விசாரணை வேண்டும் என்று பேட்டியளித்தார். அதன்பிறகு துணை முதலமைச்சர் பதவி கொடுத்துள்ளார்கள். இதற்கு பஞ்சாயத்து செய்வதற்காக மோடி தில்லியில் இருந்து வந்தார். மோடிக்கு பஞ்சாயத்து பண்ணும் வேலை மட்டுமல்ல, கட்டப் பஞ்சாயத்து செய்யும் வேலையும் இருக்கின்றது.ஜெயலலிதா மர்ம மரணத்திற்கு விசாரணை வேண்டும், விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என்று சொன்னது ஓ.பி.எஸ். தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்ததும், முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களின் மரணத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்களைச் சிறைக்கு அனுப்பும் முதல் வேலை இந்த ஸ்டாலினின் வேலையாக இருக்கும் அதில் மாற்றம் கிடையாது.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

;